கோத்தா பாரு: பள்ளிகளில் மாணவர்கள் பகடிவதைக்கு ஆளாவதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அந்நாட்டுக் கல்வி அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிள்ளைகளின் பாதுகாப்பு, நல்வாழ்வு குறித்த கவலைகள் அதிகரித்துவரும் வேளையில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
சிறுவயதிலிருந்தே நற்பண்புகளையும் அறநெறிகளையும் போதிப்பதை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தைத் தற்கொலை, துன்புறுத்தல், பகடிவதை போன்ற சம்பவங்கள் உணர்த்துவதாக சனிக்கிழமை (அக்டோபர்31) கிளந்தான் தொழில்முனைவர் மறுமலர்ச்சித் திட்டத் தொடக்க விழாவில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஏட்டுக் கல்வியில் தேர்ச்சிபெறுவது மட்டும் போதாது என்ற திரு அன்வார், கல்வியானது நன்னடத்தை, பிறரை மதித்து நடத்தல், பொறுப்புணர்வு ஆகியவற்றை மாணவர்களிடையே விதைக்க வேண்டும் என்றார்.
மாணவர்கள் பிறரைத் துன்புறுத்தும் சம்பவங்களில் ஈடுபடுவது நாட்டின் கல்விமுறையில் உள்ள குறைபாடுகளைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களும் கல்வியாளர்களும் பிள்ளைகளைப் பேணிக் காக்க உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
திருக்குர்ஆன் போதனைகளைப் பின்பற்றுதல், இறைவணக்கம், பெற்றோர், ஆசிரியர், சக மாணவர்கள் ஆகியோரை மதித்தல் உள்ளிட்ட சமயக் கல்வியின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டினார்.
போதைப்பொருள் பயன்பாடு, குற்றச்செயல்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளைக் களைய விரிவான அணுகுமுறை தேவை என்றும் அதுவே இளையர்கள் நல்வாழ்வுச் சூழலில் வளர வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
