தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைதி முயற்சிகளுக்காக ஐநா தலைமைத்துவத்தைப் பாராட்டிய அன்வார்

2 mins read
d3e6ea33-f362-4f25-85e7-e2e569ec1480
திமோர் லெஸ்டே பிரதமர் ஸனானா குஸ்மாவோ (இடம்), ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (நடு), மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆகியோர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான்-ஐக்கிய நாட்டு நிறுவன உச்சநிலை மாநாட்டில் திங்கட்கிழமை (அக்டோபர் 27) கலந்துகொண்டனர். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எடுத்துவரும் உறுதியான அமைதி முயற்சிகளையும் அவரின் தலைமைத்துவத்தையும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் பாராட்டியிருக்கிறார்.

கோலாலம்பூரில் திங்கட்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்ற ஆசியான்-ஐக்கிய நாட்டு நிறுவன உச்சநிலை மாநாட்டில் அவர் பேசினார். நாடுகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து துணிவுடன் குரல்கொடுப்பதற்காகத் திரு குட்டரெசைத் திரு அன்வார் மெச்சினார்.

காஸாவில் நிகழும் மனிதநேயப் பேரிடர் உட்பட உலகின் ஆக முக்கியமான நெருக்கடிகளை உறுதியோடும் நம்பிக்கையோடும் எதிர்கொள்வதற்காக ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைவருக்கு அவர் புகழாரம் சூட்டினார்.

திரு குட்டரெஸ் பேசியபோது, ஆசியானும் ஐக்கிய நாட்டு நிறுவனமும் நான்கு முக்கிய அம்சங்களில் ஒத்துழைக்கலாம் என்றார். அமைதியும் பூசலைத் தவிர்ப்பதும், நீடித்த நிலைத்தன்மையும் நிதிநேர்மையும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள், இணையப் பாதுகாப்புடன்கூடிய மின்னிலக்க உருமாற்றம் ஆகியவையே அந்த நான்கு அம்சங்கள்.

ஆசியான்-ஐக்கிய நாட்டு நிறுவனப் பங்காளித்துவம் என்பது இரு தரப்புக்கும் ஏற்புடைய கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வலுவடைந்துவருகிறது என்றார் திரு குட்டரெஸ்.

ஐக்கிய நாட்டு நிறுவனம் உலகெங்கும் மேற்கொள்ளும் அமைதி முயற்சிகளில் ஆசியான் ஆற்றிய பங்கையும் அவர் பாராட்டினார். உலக அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதில் வட்டாரம் கொண்டுள்ள துணிவையும் கடப்பாட்டையும் அது பிரதிபலிப்பதாகத் திரு குட்டரெஸ் சொன்னார்.

கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் சண்டையை நிறுத்துவதில் மலேசியா ஆற்றிய பங்கை அவர் மெச்சினார்.

தென் சீனக் கடலில் சம்பந்தப்பட்ட தரப்புகள் சர்ச்சைக்குரிய சம்பவங்களைத் தவிர்க்கவேண்டும் என்று திரு குட்டரெஸ் கேட்டுக்கொண்டார்.

மியன்மார் நிலவரத்தைப் பொறுத்தவரை, அங்கு இன்னும் அமைதி திரும்பவில்லை என்றார். ரத்தக்களறியைக் கண்டித்த அவர், உள்நாட்டுப் பூசலை நிறுத்தும்படி அனைத்துத் தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்தார். அனைவரையும் அரவணைக்கும் அரசியல் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.

குறிப்புச் சொற்கள்