தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம்: சிங்கப்பூரை புகழும் அன்வார்

2 mins read
11564ec3-2f68-4283-a81d-4270da0ccde6
2025 முதல் காலாண்டில் ஜோகூர் மாநிலம் 30.1 பில்லியன் ரிங்கிட் (S$9.13 பில்லியன்) மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: பெர்னாமா

மூவார்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தை வலுப்படுத்துவதற்கும் உத்திபூர்வ தேசிய நுழைவாயிலாக ஜோகூரை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கும் மத்திய அரசின் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தியுள்ளார்.

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தை நிறுவுவதன் வாயிலாக அரசாங்க முதலீடுகளை விரைவுபடுத்த இயலும் என்றார் அவர்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே தொழில்துறை மேம்பாடு, ஊழியரணி, தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களில் வலுவான ஒத்துழைப்பை உருவாக்கவும் இது உதவும் என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூர்ப் பிரதமரைத் தொலைபேசியில் அழைத்து இதன் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தக் கோரினேன். சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் அமைச்சரவைச் சந்திப்பு ஒன்றில் இதுகுறித்துக் கலந்துரையாடினோம். முன்னெப்போதும் இல்லாத வகையில், அமைச்சரவையில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் ஜோகூரில் நடந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்,” என்று மலேசியப் பிரதமர் கூறினார்.

2025ஆம் ஆண்டின் தேசிய மாதம், ‘மலேசிய தேசியக் கொடியைப் பறக்கவிடுவோம்’ இயக்கம் ஆகியவற்றின் தொடக்க நிகழ்ச்சியில் திரு அன்வார் உரையாற்றினார்.

மலேசிய நிதியமைச்சருமான அவர், சிறப்புப் பொருளியல் வட்டாரத்தினால் விளையக்கூடிய நன்மைகளுக்கான அறிகுறிகள் ஏற்கெனவே தோன்றத் தொடங்கிவிட்டன என்றார். உத்திபூர்வ துறைகளில் பல பில்லியன் மதிப்பிலான முதலீடுகளை அது ஈர்க்கத் தொடங்கியிருப்பதை அவர் சுட்டினார்.

வட்டார முதலீட்டுப் போட்டியில் மலேசியா பின்தங்கிவிடக்கூடாது என்று குறிப்பிட்ட திரு அன்வார், ஜோகூரின் உத்திபூர்வ நிலையை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறினார். சிங்கப்பூர் போன்ற வளர்ச்சியடைந்த நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் நிலையில் அதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளியலுக்கு முக்கியப் பங்களிக்கும் வகையில் ஜோகூரை உயர்த்தியதற்கு மலேசிய மாமன்னரும் ஜோகூர் சுல்தானுமான சுல்தான் இப்ராகிமுக்குத் திரு அன்வார் நன்றி கூறினார்.

இந்த ஆண்டின் (2025) முதல் காலாண்டில் ஜோகூர் மாநிலம் 30.1 பில்லியன் ரிங்கிட் (S$9.13 பில்லியன்) மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது. மலேசியாவில் ஆக அதிக முதலீட்டுத் தொகை இது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 11வது மலேசியா-சிங்கப்பூர் தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பின்போது ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்துக்கான உடன்பாட்டில் மலேசியாவும் சிங்கப்பூரும் கையெழுத்திட்டன. பொருளியல் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் முதலீடுகளை ஈர்க்கவும் அவை இணக்கம் கண்டன.

குறிப்புச் சொற்கள்