மாநில ஆட்சியாளர் பிரச்சினை குறித்து முதல்வருக்கு அன்வார் ஆலோசனை

மாநில ஆட்சியாளர் பிரச்சினை குறித்து முதல்வருக்கு அன்வார் ஆலோசனை

படம்: த ஸ்டார்

18 Sep 2026 - 4:54 pm

2 mins read

புத்ராஜெயா: நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சியாளர் தொடர்பான விவகாரத்தில், அம்மாநில முதல்வர் இஸ்மாயில் லாசிம், அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி முறை சார்ந்தது என்றும் குறிப்பாக மலாய் மக்கள் இதனை நிலைநிறுத்திப் பாதுகாக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

“இது மாநில ஆட்சியாளரை நீக்குவது அல்லது பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பான விவகாரம். இது சாதாரணமான ஒன்றன்று.

“இது அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி முறை சார்ந்த விவகாரம் என்பதால், மாநில அரசாங்கம், குறிப்பாக மாநில முதல்வர், சாக்குப்போக்குகள் சொல்லாமலோ அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமலோ உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார் என்று நம்புகிறேன்.

“நாம், குறிப்பாக மலாய் இனத்தவர், ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். மலாய் இனத்தவரைப் பெரும்பான்மையினராகக் கொண்ட இந்நாடு நிறுவப்பட்டதற்கான அடிப்படைக் கொள்கைகளையும் அரசியலமைப்பையும் நாம் உண்மையாகவே மதித்து நடந்தால், இந்த நல்லிணக்கத்தை நாம் கட்டாயம் பாதுகாக்க வேண்டும்,” என்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) புத்ராஜெயாவில் தொழுகையை நிறைவேற்றிய பிறகு அவர் கூறினார்.

வியாழக்கிழமை (செப்டம்பர் 17), நெகிரி செம்பிலான் ஆட்சியாளரான துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கோ, காலி செய்வதற்கோ நெகிரி செம்பிலான் முதல்வர் மற்றும் மாநில நிர்வாகக் குழுவிற்கு தன்னிச்சையான அதிகாரம் இல்லை என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் கூறியது.

அத்தகைய அறிவிப்பின் செல்லுபடியாகும் தன்மையும் சட்ட விளைவும், 1959ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு, சட்டச் செயல்முறைகள் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் கூறியது.

குறிப்புச் சொற்கள்