அரசாங்க முதலீட்டு நிறுவனங்களின் வீடமைப்பு நிதிக்கு அன்வார் ஆதரவு

அரசாங்க முதலீட்டு நிறுவனங்களின் வீடமைப்பு நிதிக்கு அன்வார் ஆதரவு

படம்: அன்வார் இப்ராகிம்/ஃபேஸ்புக்

27 Oct 2026 - 6:22 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் உள்நாட்டு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதி வழங்க அரசாங்கச் சார்பு முதலீட்டு நிறுவனங்களைப் பயன்படுத்துவதை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) ஆதரித்துப் பேசினார்.

புத்ராஜெயாவை நிர்மாணிப்பதில் பெட்ரோனாஸ் நிறுவனத்தின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டிய அவர், பொதுமக்களின் தேவைகளையும் வர்த்தக ரீதியான லாபத்தையும் சமநிலையில் பேண முடியும் என்று வாதிட்டார்.

நிதி அமைச்சருமான அன்வார், புத்ராஜெயா ஹோல்டிங்ஸ் வாயிலாக அந்நகரின் வளர்ச்சிக்குத் தேசிய எண்ணெய் நிறுவனம் நிதி வழங்கி உதவியதாகக் கூறினார்.

அரசாங்க அலுவலகங்கள், பொது வசதிகள், விடுதிகள், வர்த்தகத் திட்டங்கள், சுற்றுலா வசதிகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். தொடக்கத்திலிருந்தே பெட்ரோனாஸ் நிறுவனத்தின் நிதியைக் கொண்டே புத்ராஜெயா கட்டமைக்கப்பட்டது என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

அரசாங்க அமைப்புகள், அரசாங்கச் சார்பு முதலீட்டு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், சட்டரீதியான அமைப்புகள் ஆகியவற்றின் முதன்மைப் பொறுப்புகள் பாதுகாக்கப்படும் அதேவேளையில், அவற்றை மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபடுத்துவதற்கான நியாயமான காரணத்தை விளக்குமாறு பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் சியாரெட்ஸான் ஜோஹான் கேட்ட கேள்விக்குப் பிரதமர் அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.

புத்ராஜெயாவில் அரசு ஊழியர்களுக்கான தங்குமிடப் பற்றாக்குறையைத் தீர்க்கும் நோக்கில் ‘கோத்தா மடானி’ வீடமைப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் அதில் 80 விழுக்காட்டு வீடுகள் அரசு ஊழியர்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

கனடா, தென்கொரியா, நெதர்லாந்து, பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் தங்குமிட வசதிகளில் அரசாங்க முதலீட்டு நிறுவனங்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை அவர் நினைவுகூர்ந்தார்.

இத்தகைய முதலீட்டு முயற்சிகள் உள்நாட்டிலும் ஏன் விரிவுபடுத்தப்படக் கூடாது என்றும் அவர் வினவினார். மாணவர் தங்குமிட முன்னெடுப்பின் முதல் கட்டமாக 10,000 வீடுகள் கட்டப்படும் என்றும் நீண்டகால இலக்காக அரசாங்க முதலீட்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் 30,000 வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அன்வார் தெரிவித்தார். இது வெறுமனே மக்களுக்கு உதவுவது தொடர்பானது மட்டுமல்லாமல், வர்த்தகத் தேவைகளுக்கும் நலன்களுக்கும் வழிவகை செய்வதாகும் என்று அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்