அன்வார்: ஊழலில் ஈடுபடுவோர் உயர் பதவி வகித்தாலும் தப்ப முடியாது

அன்வார்: ஊழலில் ஈடுபடுவோர் உயர் பதவி வகித்தாலும் தப்ப முடியாது

1 mins read
19001b05-127c-4f0b-9df3-073ff4ada642
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: ஏஎஃப்பி

பட்டர்வொர்த்: ஊழலில் ஈடுபவோர் யாராக இருந்தாலும், அவர்கள் உயர் பதவிகளில் இருந்தாலும் தப்ப முடியாது என்றும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதி அளித்துள்ளார்.

மலேசியாவின் தேசிய விவசாயிகள் அமைப்பை உலுக்கியுள்ள ஊழல் விவகாரம் குறித்து அதிகாரிகள் பயமின்றி, நேர்மையுடன் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

“தற்போது தேசிய விவசாயிகள் அமைப்பு தொடர்பான ஊழல் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுதொடர்பாக அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன. அது சுயேச்சை அமைப்பாக இருந்தாலும் விவசாய, உணவுப் பாதுகாப்பு அமைச்சின்கீழ் அது செயல்பட்டு வருகிறது. அண்மையில் கசானா நேஷனல் அமைப்பில் ஊழல் விவகாரம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது. அந்த அமைப்பின் தலைவராக நாட்டின் பிரதமர் என்கிற முறையில் நான் பதவி வகிக்கிறேன்.

“இந்த விகாரம் தொடர்பான விசாரணைக்கு நான் இடையூறு விளைவிக்கமாட்டேன். தவறு இழைக்கப்பட்டிருந்தால் விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்,” என்று பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான உணவு அங்காடி நிலை கடைக்காரர்கள், சிறு வர்த்தகர்கள் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

வயல்களில் பயன்படுத்தப்படும் உரத்தை விநியோகிப்பதில் ஊழல் நடந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் அதுதொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி கூறினார்.

குறிப்புச் சொற்கள்