தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி அடுத்த வாரம் சீனா செல்லவுள்ளார். அவர் ஷென்சென் நகரில் நடக்கும் ஏபெக் மாநாட்டில் கலந்துகொள்வார்.
ஜப்பானின் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாகத் திருவாட்டி தக்காய்ச்சி சீனா செல்கிறார். நவம்பர் 16 முதல் 19 வரை பிலிப்பீன்சிலும் சீனாவிலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
மணிலாவில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்ற பிறகு தக்காய்ச்சி சீனாவுக்குச் செல்வார் என்று ஜப்பானின் துணை அமைச்சரவைச் செயலாளர் மசனாவ் ஒசாக்கி அறிவித்தார்.
ஏபெக் மாநாட்டில் வர்த்தகம், முதலீடு, வட்டாரப் பொருளியல் ஒருங்கிணைப்பு, எரிசக்தி, மின்னிலக்கப் பொருளியல் ஆகியவை குறித்துத் திருவாட்டி தக்காய்ச்சி பேசவுள்ளார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்கும் தக்காய்ச்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்குமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது. இரு தலைவர்களும் தனியாகச் சந்தித்துப் பேச வாய்ப்பில்லை எனக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
தைவான் தொடர்பில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஆசியான் மாநாட்டினிடையே ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ‘குவாட்’ கூட்டத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
