தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவில் ஐஃபோன் வாங்க விரையும் வாடிக்கையாளர்கள்

1 mins read
89dd0c83-6d49-495e-9b23-670f8b61c617
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆப்பிள் கடையில் ஏப்ரல் 4ஆம் தேதி ஐஃபோன்களைப் பார்வையிடும் வாடிக்கையாளர்கள். - படம்: இபிஏ

லாஸ் ஏஞ்சலிஸ்: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய வரிவிதிப்பால் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை சரிந்துள்ளது. ஆனால், வரிவிதிப்பு குறுகிய காலத்துக்கு அனுகூலத்தையும் தந்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஐஃபோன் வாங்க கடைகளுக்கு விரைவதே அது.

அமெரிக்கா எங்கும் உள்ள ஆப்பிள் கடைகளில் கடந்த வாரயிறுதியில் வாடிக்கையாளர்கள் நிரம்பி வழிந்ததாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர். வரிவிதிப்பு நடப்புக்கு வந்தவுடன் ஐஃபோன் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துவிடும் என வாடிக்கையாளர்கள் அஞ்சுவதே இதற்குக் காரணம்.

ஆப்பிளின் ஆக அதிக விற்பனையாவதும் ஆக முக்கியமான சாதனமுமான ஐஃபோன்களில் பெரும்பாலானவை சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்களுக்கு 54 விழுக்காடு வரிவிதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

வரிவிதிப்புக்குத் தயார்படுத்திக்கொள்ள ஆப்பிள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐஃபோன்களை அமெரிக்கச் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய அந்நிறுவனம் முற்படுகிறது.

சீனாவைவிட இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரி தற்போது குறைவாக உள்ளது.

ஆப்பிள் கடந்த சில ஆண்டுகளாக அதன் தயாரிப்புகளை வியட்னாமுக்கும் மாற்றியுள்ளது. சீனாவைவிட வியட்னாமுக்கும் வரிவிதிப்பு குறைவு. ஆப்பிள் கைக்கடிகாரங்கள், மேக் மடிக்கணினிகள், ஏர்போர்ட்ஸ், ஐபேட் கைக்கணினிகள் ஆகியவற்றை வியட்னாமில் ஆப்பிள் தயாரித்துள்ளது. சில மேக் மடிக்கணினிகளை அயர்லாந்து, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளிலும் ஆப்பிள் தயாரிக்கிறது.

குறிப்புச் சொற்கள்