சான் பிரான்சிஸ்கோ: மடக்கக்கூடிய ஐபோனை 2026ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என்று தொழில்நுட்பச் செய்தி நிறுவனமான ‘இன்ஃபர்மேஷன்’ ஜூலை 23ஆம் தேதி தெரிவித்தது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஆகப் புகழ்பெற்ற ஒரு தயாரிப்பை, மிகப் பெரியளவில் மறுவடிவமைக்கும் திட்டமாக இது அமைந்திடும்.
புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இதேபோன்ற மடக்கு வன்பொருள் வடிவமைப்பை, ‘சம்சுங் இலெக்டிரானிக்ஸ்’ 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
அதையடுத்து, ஐபோனை அதே பாணியில் தயாரிக்கும் திட்டத்தை கலிபோர்னியாவில் இயங்கிவரும் ‘குபட்டினோ’ கொண்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் மடக்கு ஐபோன் குறித்த திட்டம், யோசனைக் கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஐபோன் கருவிக்கான பாகங்களைத் தயாரிக்க ஆசியாவில் உள்ள வழங்குநர்களை நிறுவனம் அணுகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சீனாவின் ‘ஹுவாவெய்’, ‘ஹானர்’, அனைத்துலக அளவில் ‘சம்சுங்’ ஆகிய நிறுவனங்கள் அதிகப் போட்டி கொடுத்துவரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் அமையவுள்ள இந்த மடக்கு ஐபோன்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மாதத் தொடக்கத்தில் சம்சுங் அதன் ஆகப் புதிய மடக்கு திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியது. ஆக விலையுயர்ந்த இவ்வகை திறன்பேசிகள் எடை குறைந்த, மேலும் மெலிந்த வடிவமைப்புடன் புதிய செயற்கை நுண்ணறிவு அம்சங்களைக் கொண்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, மடக்கும் வசதிகொண்ட ஐபோனை ஆப்பிள் வெளியிடும் என்பதை உறுதிப்படுத்த முடியாது என்றும் அறிக்கை குறிப்பிட்டது.


