வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் திட்டப்படி, காஸாவில் அமைதியை நிலைநாட்ட அமைக்கப்பட்ட காஸா அமைதி வாரியத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் சனிக்கிழமை (ஜனவரி 17) நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வாரியத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர், மத்திய கிழக்கிற்கான அமெரிக்கச் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கொவ், அதிபர் டிரம்ப்பின் மருமகன் ஜாரட் குஷ்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
காஸாவின் தற்காலிக நிர்வாகத்தை அவர்கள் தலைமையேற்று நடத்துவார்கள். அதிபர் டிரம்ப்பின் தலைமையில் காஸா அமைதி வாரியம் இயங்கும். கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் ஏற்பட்ட சண்டை நிறுத்த உடன்பாட்டில் இந்தத் திட்டமும் உள்ளடங்கும்.
காஸாவின் நிர்வாகத்தை தற்காலிகமாக கவனிக்கும் வாரியத்தில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளோரின் தனிப்பட்ட கடமைகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அமைதித் திட்டப்படி, பாலஸ்தீனர்கள் உள்ளடங்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு அமைதி வாரியத்தின்கீழ் செயல்படும்.
சண்டை நிறுத்தம் நடப்பில் இருந்தாலும் காஸாவில் வன்முறை அவ்வப்போது தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது. இதுவரையில் 100 சிறுவர்கள் உள்பட, 440 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலியத் தரப்பில் மூன்று ராணுவவீரர்கள் பலியாகியுள்ளனர்.
காஸா அமைதி வாரியத்தில் அமெரிக்கப் பெருஞ்செல்வந்தர் மார்க் ரோவன், உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா, அதிபர் டிரம்ப்பின் ஆலோசகர் ராபர்ட் கேப்ரியல், முன்னாள் ஐக்கியநாட்டு மத்தியக் கிழக்கு தூதர் நிக்கொலே மிலாடெனோவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ஈராக்கில் நடந்த போருக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான திரு டோனி பிளேர் அங்கம் வகிப்பதால், பிரட்டிஷ் காலனித்துவக் காலத்தை நினைவூட்டுவதாக அமைதி வாரியம் குறித்து பார்வையாளர்கள் சாடியுள்ளனர்.

