போக்குவரத்து அமைச்சர் நியமனம் பிரதமரின் முடிவே: ஆண்டனி லோக்

போக்குவரத்து அமைச்சர் நியமனம் பிரதமரின் முடிவே: ஆண்டனி லோக்

படம்: பெர்னாமா

11 Nov 2026 - 6:24 pm

2 mins read

புத்ராஜெயா: மலேசியப் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) உடனடியாக விலகியதைத் தொடர்ந்து, தமக்கு பதிலாக அப்பதவிக்கு ஒருவரை நியமிப்பது குறித்து ஜனநாயக செயல் கட்சி இதுவரை எவ்வித கலந்துரையாடலும் நடத்தவில்லை என்பதை திரு ஆண்டனி லோக் புதன்கிழமையன்று (நவம்பர் 11) உறுதிப்படுத்தினார்.

இவ்விவகாரத்தில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் இறுதி முடிவை எடுப்பார் என்று அவர் தெரிவித்தார்.

“இது பிரதமரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அவரிடம்தான் இதுகுறித்துப் பேச வேண்டும்” என திரு லோக் செய்தியாளர்களிடம் கூறினார். போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து திரு லோக் விலகுவதை பிரதமர் விரும்பாத நிலையில், தமது முடிவை மறுபரிசீலனை செய்வாரா என்று வினவியபோது, தமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் மீண்டும் தெளிவுபடுத்தினார். அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் இப்பொறுப்பை ஏற்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, தேர்தல் முடிந்த பின்னரே அதுகுறித்து பேச முடியும் என அவர் தெரிவித்தார்.

“கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் கட்சி வளர்ச்சிப் பணிகளில் நான் முழுக்கவனம் செலுத்த வேண்டும். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற கடமையையும், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் அங்கமாகப் பிரதமருக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதையும் எனது முதன்மைப் பணிகளாகக் கொண்டு தற்போது செயல்படுவேன்” என்றார் திரு லோக்.

இதனிடையே, போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து தாம் விலகிய போதிலும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான எடையுடன் இயக்கப்படும் வர்த்தக வாகனங்களுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகள் தொய்வின்றித் தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை அனுமதிக்கக் கூடாது என்றும் திரு லோக் எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்