கோலாலம்பூர்: ஏர்ஏஷியா எக்ஸ் விமானம் ஒன்றில், விமானத்தினுள் விளக்குகளின் வெளிச்சம் குறைக்கப்பட்டபோதிலும் மூன்று பயணிகள் தொடர்ந்து சத்தமாகப் பேசிக்கொண்டிருந்ததால், சக பயணிகளுடன் திங்கட்கிழமை (ஜூலை 21) இரவு சண்டை மூண்டது.
இதுகுறித்து சிஎன்ஏ வினவியபோது, கோலாலம்பூரிலிருந்து சீனாவின் செங்டு நோக்கிச் சென்றுகொண்டிருந்த டி7326 விமானத்தில் தகராறு மூண்டதை ஏர்ஏஷியா உறுதிப்படுத்தியது.
நியூயார்க் போஸ்ட், மலேசியச் செய்தி நிறுவனமான மலாய் மெயில் தகவல்படி, விமானம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. உரையாடிக்கொண்டிருந்த ஒரு சில பெண்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஒரு ஆண் பயணி, தாம் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் சத்தத்தைக் குறைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால், அந்த மூவரும் அதை மறுத்து தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த ஆண் பயணி, அந்தப் பெண்களை ‘முட்டாள்கள்’ என்று அழைத்ததோடு, ‘வாயை மூடுங்கள்’ என்றும் ‘நான் தூங்க வேண்டும்’ என்றும் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வந்தது.
விமானப் பணியாளர்கள், ‘நிறுவப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளின்படி நிலைமையை உடனடியாகவும் நிபுணத்துவ ரீதியாகவும் கையாண்டனர்’ என்று ஏர்ஏஷியா எக்ஸ் சிஎன்ஏவிடம் தெரிவித்தது.
“விமானம் தரையிறங்கியதும் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்ய அவர்கள் விமானத்திற்குள் சென்றனர்,” என்றும் அது மேலும் கூறியது.
இந்தச் சம்பவம் அங்கிருந்து திரும்பும் விமானச் சேவைகளையோ செயல்பாடுகளையோ பாதிக்கவில்லை என்று ஏர்ஏஷியா எக்ஸ் சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
மொத்தம் ஐந்து சீனப் பயணிகள் இந்தத் தகராற்றில் ஈடுபட்டதாகவும் விமான நிலையக் காவல்துறையினர் அவர்களில் மூன்று பேரைக் கைதுசெய்து, மற்ற இருவருக்கும் அபராதம் விதித்ததாகவும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் புதன்கிழமை தெரிவித்தது.
ஒழுங்கீனமான பயணிகளின் நடத்தை குறித்து ஏர்ஏஷியா எக்ஸ், “அனைத்துப் பயணிகளும் தங்கள் பயணம் முழுவதும் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைவூட்ட விரும்புகிறது,” என்று கூறியது.