தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீடு புகுந்து திருடும்போது வாக்குவாதம்; 20 முறை கத்தியால் குத்தப்பட்ட ஆடவர் மரணம்

1 mins read
ab0da81b-f66a-4c5b-91fa-d732eab1ff92
வீட்டில் காவல்துறையினர் ஆடவரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர். - படம்: மலேசிய ஊடகம்

கொள்ளையடிப்பதற்காக வீடு புகுந்த நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அவ்வீட்டு உரிமையாளர்.

இதையடுத்து, அவர் 20 முறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

மலேசியாவின் பெட்டாலிங் ஜயாவில் 36 வயது ஆடவர் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 15ஆம் தேதி இரவு இவ்வாறு கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அவ்வீட்டில் குடியேறிய ஆடவர், ஆறு முறை தலையில் கத்தியால் குத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த கொடூரத் தாக்குதலை அடுத்து வீட்டு உரிமையாளரின் பணப்பை, உடைமைகள், கைப்பேசி போன்றவை கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் ஆடவரது வீட்டில் பெரும் கூச்சல் கேட்டதாக அண்டைவீட்டார் கூறினர்.

அந்த சத்தத்திற்குப் பிறகு ஆடவர் தம் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் அண்டைவீட்டார் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

ஸ்ரீ டமான்சாரா வீடு ஒன்றுக்கு வந்த காவல் துறையினர், அங்கு ஆடவரது உயிரற்ற உடலைக் கண்டுபிடித்தனர்.

கொள்ளையடிக்க வந்தவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டு ஆடவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணை கூறுகிறது.

ஆடவருடன் போராடியதில் சந்தேக நபர்களுக்கும் கத்திக்குத்துக் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

சந்தேகத்திற்குரிய காயங்களுடன் காணப்படும் நபர்களைப் பார்த்தால் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்குக் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கொலை என்று இச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்படுகிறது. தண்டனை நிரூபணமானால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

சந்தேக நபர்களை அடையாளம் காணவும் குற்றச்செயல் புரிந்ததன் நோக்கத்தை அறியவும் விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்