வாஷிங்டன்: சமூக ஊடகத்தில் முன்னாள் அமெரிக்க அதிபரும் தற்போதைய குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளருமான டோனல்ட் டிரம்ப்பை கொல்லப்போவதாக மிரட்டிய அரிசோனா மாநில ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திரு டோனல்ட் டிரம்ப் தமது தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மெக்சிகோ எல்லையில் உள்ள கோச்சிஸ் கவுண்டியை பார்வையிடச் சென்றுள்ளார்.
அவரைக் கொல்லப்போவதாக மிரட்டிய அரிசோனா மாநில ஆடவரின் பெயர் ரோனல்ட் லீ சிவ்ருட் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அவர் மீது விஸ்கான்சின் மாநிலத்தில் 66 கைது ஆணைகள் உள்ளதாக ஷெரிஃப் அலுவலகம் கூறுகிறது.
“இல்லை, நான் இதுபற்றிக் கேள்விப்படவில்லை. ஆனால், இது எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை. ஏனெனன்றால் நான் கெட்டவர்களுக்கு கெட்டதை செய்ய நினைக்கிறேன்,” என்று அரிசோனா மாநிலத்தில் இது பற்றிக் கேட்டதற்கு பதிலளித்த திரு டிரம்ப் சொன்னார்.
நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் விடுக்கப்பட்டுவரும் மிரட்டல்களில் இதுவே ஆகக் கடைசியானது.
ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிசை மிரட்டியதற்காக வெர்ஜினியா மாநில ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
முன்னதாக, ஜூலை மாதம் திரு டிரம்ப்பை கொல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சியில் திரு டிரம்ப்பின் காதில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அந்தச் சம்பவத்தில் மேலும் இருவருக்குக் காயம், ஒருவர் உயிரிழந்தார்.