ஸ்டாக்ஹோம்: உலகம் பதற்றம் அடைந்துவருவதால் போர் ஆயுதங்களின் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாக்ஹோம் அமைதி ஆய்வுக் கழகம் (SIPRI) திங்கட்கிழமை (டிசம்பர் 1) வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் வெளிவந்தன,
உக்ரேனில் நடக்கும் போர், ஐரோப்பிய நாடுகள் அதிக ஆயுதங்களை வாங்குவதற்கான முக்கியக் காரணம் என்பதும் ‘சிப்ரி’யின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஸாவில் நடக்கும் போரும் மற்றொரு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
உலகின் 100 முன்னணி ஆயுதத் தயாரிப்பாளர்கள் கூட்டாக S$879 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை 2024ஆம் ஆண்டில் தயாரித்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய 2023ஆம் ஆண்டைவிட 5.9 விழுக்காடு அதிகம். மேலும் 2015ஆம் ஆண்டுமுதல் 2024ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் தயாரிப்பாளர்களின் வருவாய் 26 விழுக்காடு உயர்ந்துள்ளது.
ஆனால், தயாரிப்பில் ஏற்பட்டுள்ள தாமதம், விநியோகத்தில் சில பிரச்சினைகளை உண்டாக்கியுள்ளது.
“இதுவரையில் ஆய்வகம் பதிவுசெய்ததில் கடந்த ஆண்டு உலகளாவிய ஆயுத விற்பனை வரவுகள் ஆக அதிக அளவை எட்டியுள்ளன,” என்று சிப்ரியின் ராணுவ வரவுசெலவு, ஆயுத உற்பத்தி திட்டத்தின் ஆய்வாளர் திரு லோரன்சோ ஸ்கரட்டோ அறிக்கையொன்றில் கூறினார்.
ஆசியாவையும் ‘ஓஷியேனியா’ எனப்படும் பசிஃபிக் பெருங்கடல் தீவுகளையும் தவிர்த்து உலகின் ஏனைய நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் கடந்த ஆண்டு போர் ஆயுதங்களை அதிகம் வாங்கியுள்ளன என்று மற்றொரு ஆய்வாளர் ஜேட் குய்பர்டியு ரிகார்ட் குறிப்பிட்டார்.
உக்ரேனில் நடப்பதுபோன்று ரஷ்யாவினால் போர் மூளும் அபாயம் தொடர்வதால் ஐரோப்பிய நாடுகள் அவ்வாறு ஆயுதங்களை வாங்குகின்றன என்றார் அவர். உக்ரேனுக்கு ஆயுத உதவி வழங்கும் நாடுகள் அவற்றில் குறிப்பாக அடங்குகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவில் 39 முன்னணி ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. மேலும், 2023ஆம் ஆண்டைவிட 3.8 விழுக்காடு அதிகமாக 2024ஆம் ஆண்டில் $434.2 பில்லியன் (US$334 பில்லியன்) மதிப்புள்ள ஆயுத விற்பனையை அவை செய்துள்ளன. அது உலகின் பாதி ஆயுத விற்பனைக்கு ஈடாகும்.

