மியன்மார் அமைச்சரைச் சந்தித்தார் ஆசியான் தூதர்

மியன்மார் அமைச்சரைச் சந்தித்தார் ஆசியான் தூதர்

படம்: ராய்ட்டர்ஸ்

30 Oct 2026 - 5:21 pm

2 mins read

நேப்பிடோ: ஆசியான் சிறப்புத் தூதர் மியன்மாருக்கு மேற்கொண்ட பயணத்தின்போது அந்நாட்டு வெளியுறவு அமைச்சரைச் சந்தித்திருப்பதாக அதிகாரபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அங்கு நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் மனிதாபிமான உதவிகள் சென்றடைவது குறித்து அவர்கள் விவாதித்ததாகக் கூறப்பட்டது.

மியன்மாருக்கான சிறப்புத் தூதரும் பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சருமான திருவாட்டி மா.தெரசா லாஸரோ, வியாழக்கிழமை (அக்டோபர் 30) மியன்மாரின் தலைநகர் நேப்பிடாவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டின் மாங் சுவேயைச் சந்தித்துப் பேசினார்.

ராணுவப் புரட்சியைத் தொடர்ந்து மோதல்களைத் தணிக்கத் தவறியதால், 2021ஆம் ஆண்டு முதல் ஆசியான் உச்ச மாநாடுகளில் பங்கேற்க மியன்மாரின் தலைவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது; இந்நிலை மாறி, ஆசியானுடனான உறவை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அந்நாட்டின் ராணுவ ஆதரவு அரசாங்கம் விரும்புகிறது.

ஆசியான் அமைப்பில் மியன்மார் முன்னர் வகித்த பங்கையும் உரிமைகளையும் மீண்டும் நிலைநாட்டுவதற்கான வழிகள்குறித்துத் திருவாட்டி லாஸரோ விவாதித்ததாக, அந்நாட்டு அரசாங்கம் நடத்தும் ‘குளோபல் நியூ லைட் ஆஃப் மியன்மார்’ நாளிதழ் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

எனினும், திருவாட்டி லாஸரோவின் அலுவலகம் அவரது பயணம்குறித்து வெளியிட்ட அறிக்கையில், மியன்மாரின் பங்கை மீண்டும் நிலைநாட்டுவதன் தொடர்பிலான விவாதங்கள்பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மியன்மார் அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம், ஆசியானின் சிறப்புத் தூதர் இனி தேவைப்பட மாட்டார் என்று கூறியிருந்தது.

நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய நலன்களுக்கு உட்பட்டு, ஆசியானின் ஐந்து அம்ச அமைதித் திட்டத்தை நடைமுறைப்படுத்த மியன்மார் செயல்பட்டு வருவதாகத் திரு டின் மாங் சுவே கூறியதாக அரசாங்க ஊடகங்கள் தெரிவித்தன.

ராணுவப் புரட்சியின்போது பதவியிலிருந்து அகற்றப்பட்டு, சிறைவைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூச்சி அம்மையாரை நேரில் சந்திக்கத் திருவாட்டி லாஸரோ அனுமதி கோரியிருந்தார்.

“நான் ஆங் சான் சூச்சியின் நிலைமைகுறித்துக் கேட்டறிந்தேன்; அதற்கு அவர் நலம் விசாரிக்கப்பட்டு நல்ல நிலையில் இருப்பதாய்ச் சாதகமான பதில் கிடைத்தது,” என்று அவர் கூறியதாக பிலிப்பீன்சின் ‘பில்யோனாரியோ’ ஊடகம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்