2030ல் உலகின் நான்காவது ஆகப்பெரிய பொருளியலாக ஆசியான்: மலேசியா

2030ல் உலகின் நான்காவது ஆகப்பெரிய பொருளியலாக ஆசியான்: மலேசியா

2 mins read
54f6fdc6-4d03-4e17-a9b9-ca5dbdc11362
2025ல் ஆசியானுக்குத் தலைமை தாங்கியபோது மலேசியா பல தீர்மானங்களை முன்வைத்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சர் முஹமட் ஹசான் தெரிவித்துள்ளார். - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

புத்ரஜெயா: வரும் 2030ஆம் ஆண்டிற்குள் உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளியலாக உருவாக ஆசியான் இலக்கு வைத்துள்ளது. இருந்தாலும் அதில், அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இடையிலான வணிகம் இன்னும் 25 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் முஹமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

நாடுகளுக்கு இடையே வணிக உறவுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

உறுப்பு நாடுகளுக்கு இடையே வணிகத்தை மேம்படுத்தும் வகையில் பொருள்கள் தங்குத் தடையின்றி செல்லும் வழிமுறைகள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

“கடந்த ஆண்டு ஆசியானுக்குத் தலைமை தாங்கிய மலேசியா பல தீர்மானங்களை வெற்றிகரமாக முன்வைத்தது,” என்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) விஸ்மா புத்ராவில் நடைபெற்ற 59வது ஆசியான் தினத்தின் செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

தற்போதுஆசியானுக்குத் தலைமை ஏற்றுள்ள பிலிப்பீன்ஸ், கோலாலம்பூரின் பிரகடனம், மலேசியாவின் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. தென்கிழக்கு ஆசியாவை அமைதியான வட்டாரமாக மாற்றும் உறுதியுடன்தான் ஆசியான் தொடங்கப்பட்டது என்றார் அவர்.

தற்போது ஆசியானுக்கு 59 வயதாகிறது. மேலும் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அண்மையில் திமோர் லெஸ்டே இளம் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்தக் குடும்பத்தில் இணைந்துள்ளது.

இப்போது அரசியல் விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், கூட்டாக வலுவான பொருளியலைக் கொண்ட ஓர் அமைப்பாக மாறுவதில் அதிக கவனம் செலுத்துகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆசியான் சமூகத் தொலைநோக்கு 2045 திட்டத்திற்கான நிரந்தர வழிகாட்டியாக மலேசியாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஆசியானின் அடித்தளமான வணிகத்தை மேலும் வலுப்படுத்தவும் அதை ஒன்றாக அடையவும் உறுதி செய்ய விரும்புகிறோம் என்று திரு முஹமட் ஹசான் கூறினார்.

நிகழ்ச்சியில் சுற்றுலா, கலை, கலாசார துறை அமைச்சர் தியோங் கிங் சிங் கலந்து கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
திமோர் லெஸ்டேமலேசியாஆசியான்பிலிப்பீன்ஸ்