தாய்லாந்து-கம்போடியா சண்டை நிறுத்தம் பற்றிப் பேச ஆசியான் கூடுகிறது

2 mins read
e1b1ebd3-bbe4-4545-8c0b-111021f55f9e
வட்டார அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் தாய்லாந்தும் கம்போடியாவும் கலந்து பேசுவது முக்கியம் என்று மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

புத்ராஜெயா: தாய்லாந்து-கம்போடியா இடையிலான தற்போதைய நிலவரத்தைப் பற்றி விவாதிக்க ஆசியானுக்குத் தற்போது தலைமை வகிக்கும் மலேசியா சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதில், ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கவிருக்கின்றனர்.

கோலாலம்பூரில் நாளை (டிசம்பர் 22) சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியா, கம்போடியா மற்றும் தாய்லாந்துப் பிரதமர்களின் முடிவின்படி டிசம்பர் 22ஆம் தேதி சிறப்புக் கூட்டம் கூட்டப்படுகிறது என்று மலேசிய வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தச் சிறப்புக் கூட்டத்துக்கு மலேசிய வெளியுறவு அமைச்சர் முஹமட் ஹசான் தலைமையேற்கவிருக்கிறார்.

ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், இரண்டு ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் (கம்போடியா, தாய்லாந்து) இடையே அமைதி, சண்டை நிறுத்தம், பதற்றத்தைத் தணிப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஆதரவாக ஆசியான் எடுக்கக்கூடிய சாத்தியமான நடவடிக்கைகளுக்கும் இந்தச் சிறப்புக் கூட்டம் ஒரு தளமாக அமையும்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசியான் உறுப்பு நாடுகளிடையே ஒற்றுமையை நிலைநாட்டும் ஆசியானின் கடப்பாட்டை இந்தச் சிறப்புக் கூட்டம் பிரதிபலிக்கிறது, ஆசியானின் தலைவராக, ஆக்கப்பூர்வமான உரையாடல்களை மலேசியா ஊக்குவிப்பதில் உறுதியாக உள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

இதற்கிடையே மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், கோலாம்பூரில் நடைபெறும் ஆசியான் சிறப்புக் கூட்டம், தாய்லாந்தும் கம்போடியாவும் வெளிப்படையாகவும், ஆக்ககரமாகவும் விவாதித்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தைத் தணிக்க உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

“தாய்லாந்து, கம்போடியா பிரதமர்களுடன் நிலைமையை சீர் செய்யவும் சிறந்த வழிகள் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறேன். இவ்வட்டார அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் இரு நாடுகளும் கலந்து பேசுவது முக்கியம்,” என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தமது ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 21) ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்