பேங்காக்: சர்ச்சைக்குரிய தாய்லாந்து-கம்போடியா எல்லையில் ஏற்பட்ட கண்ணிவெடிச் சம்பவம், அமெரிக்கா சமரசம் செய்து வைத்த போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் பாதிக்கும் என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வெள்ளிக்கிழமை (நவம்பர் 10) ஆசியான் பார்வையாளர்கள் விசாரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தாய்லாந்து தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கண்ணிவெடிகள் புதியவை என்று ஒரு வட்டாரக் குழு தெரிவித்ததாக, மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமது ஹசன் கூறிய ஒரு நாள் கழித்து கண்ணிவெடிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
“தாய்லாந்து வெளியுறவு அமைச்சருடன் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். இரு தரப்பினரும் அமைதியடைந்து, அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்று திரு முகமது ஹசன் தெரிவித்தார்.
இதன் காரணமாக, தாய்லாந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறுத்திவைத்துள்ளது. மேலும் கம்போடியா இதன் தொடர்பில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அது கோரியுள்ளது. புதிய PMN-2 கண்ணிவெடிகளை வைத்ததாகக் கம்போடியா குற்றஞ்சாட்டியதை அடுத்து, நவம்பர் 10ஆம் தேதி தாய்லாந்தின் சிசாகெட் வட்டாரத்தின் காந்தாராலக் மாவட்டத்தில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இது கம்போடியாவின் பிரியா விஹார் வட்டாரத்திற்கு எதிரே உள்ளது.
இந்தக் குற்றச்சாட்டைக் கம்போடியா மறுத்துள்ளதுடன், அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவில் கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை பேங்காக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. தாய்லாந்தும் கம்போடியாவும் தொடர்ந்து பதற்றங்களைத் தணிப்பதை உறுதி செய்வதற்காக, ஆசியான் அமைப்பைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளைக் கொண்ட பார்வையாளர் குழுவைப் போர் நிறுத்த ஒப்பந்தம் அமைத்துள்ளது.
நவம்பர் 14ஆம் தேதி மற்றொரு பார்வையாளர் குழு, சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் நேரில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டது. நவம்பர் 11ஆம் தேதி எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், கம்போடியாவில் ஒருவர் கொல்லப்பட்டார், மூன்று பேர் காயமடைந்தனர்.
தாய்லாந்துப் படையினர்தான் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கம்போடியா கூறியது. ஆனால் கம்போடியாதான் ஆரம்பத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், தனது வீரர்கள் எச்சரிக்கைக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தாய்லாந்து ராணுவம் கூறியது.
ஜூலை மாதத்தில் எல்லைப் பதற்றங்கள் ஐந்து நாள் சண்டையாக வெடித்தன. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மற்றும் ஆசியானின் தற்போதைய தலைவரான மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆகியோரின் சமரசத்தில் போர்நிறுத்தம் ஏற்படுவதற்கு முன்பு, குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டனர், 300,000 பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
தாய்லாந்து ராணுவத்தால் பகிர்ந்து கொள்ளப்பட்ட நிபுணத்துவப் பகுப்பாய்வின் அடிப்படையில், இந்தக் கண்ணிவெடிகளில் சில புதிதாக வைக்கப்பட்டிருக்கலாம் என்று ராய்ட்டர்ஸ் அக்டோபரில் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

