எரிசக்திப் பாதுகாப்புத் திட்டங்களில் ஆசியான் அமைச்சர்கள் கவனம்

எரிசக்திப் பாதுகாப்புத் திட்டங்களில் ஆசியான் அமைச்சர்கள் கவனம்

படம்: ராய்ட்டர்ஸ்

06 Oct 2026 - 11:07 am

2 mins read

மணிலா: நீடிக்கும் மத்திய கிழக்கு போர் காரணமாக அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கும் எரிசக்திப் பாதுகாப்புத் திட்டங்கள் மீது ஆசியானின் கவனம் அதிகரித்து வருகிறது.

இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியைப் பெரிதும் நம்பியிருக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மத்திய கிழக்குப் போர் காரணமாகப் பாதிப்பை எதிர்நோக்குகின்றன.

இந்த வாரம் மணிலாவில் ஒன்றுகூடும் தென்கிழக்காசிய எரிசக்தித் துறை அமைச்சர்கள் அது பற்றிக் கலந்து பேச உள்ளனர்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் நீடித்துவரும் சூழலில், மத்திய கிழக்கில் உள்ள உள்கட்டமைப்புகள் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் மீதான தாக்குதல்களால் எரிசக்தி விலை அதிகரிக்கிறது.

அதன் பாதிப்புகளைக் குறைக்க ஆசியான் அமைப்பு தனது திட்டமிடப்பட்ட எரிசக்திப் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆசியான் வட்டாரத்திலுள்ள சுத்திகரிப்பு ஆலைகள் தங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் பாதியளவுக்கும் அதிகமானவற்றை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றன.

உலக அளவில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 100 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.

அத்துடன், அக்டோபர் மாதத்திற்கான பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதியைச் சீனா நிறுத்திவைத்துள்ளதால், ஒட்டுமொத்த எரிசக்திப் பாதுகாப்புக் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.

இந்தப் பின்னணியில், மணிலாவில் சந்திக்கும் எரிசக்தித் துறை அமைச்சர்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பேச்சுகளுக்குப் பிறகு தொடங்கப்பட்ட வட்டார எரிபொருள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பெட்ரோலியப் பாதுகாப்பிற்கான ஆசியான் கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஒருங்கிணைந்த அவசரகாலச் சமாளிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகளும் அடங்கும்.

இதுமட்டுமன்றி, ஆசியான் மின் கட்டமைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நீண்டகால முயற்சிகளும் இந்தச் சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன.

தற்போதைய நிலவரம் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பிலிப்பீன்ஸ் எரிசக்தித் துறைத் துணை அமைச்சர் ஃபெலிக்ஸ் ஃபியூண்டெபெல்லா, நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் எரிசக்தித் துறையின் மீள்திறன் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், எரிசக்திப் பாதுகாப்பு என்பது வெறும் தொழில்நுட்ப அளவிலான அம்சமாக இல்லாமல், ஆசியான் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களின் முதன்மை முன்னுரிமையாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
எரிசக்திஆசியான்தென்கிழக்காசியா