மியன்மார் அமைதித் திட்டம் குறித்து ஆசியான் ஆய்வு

மியன்மார் அமைதித் திட்டம் குறித்து ஆசியான் ஆய்வு

படம்: ஏஎஃப்பி

13 Nov 2026 - 8:34 pm

2 mins read

மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறவுள்ள 49வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மியன்மார் குறித்து அதிகம் பேசவுள்ளனர்.

ஆசியான் மாநாடு நவம்பர் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. அக்கூட்டத்தில் மியன்மார் நிலவரம் தொடர்பான முக்கிய ஆசியான் அமைதித் திட்டத்தின் அமலாக்கம் குறித்துத் தலைவர்கள் விரிவாக ஆய்வு செய்யவுள்ளனர் என்று பிலிப்பீன்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மியன்மார் தலைவர்களை மீண்டும் ஆசியான் கூட்டமைப்பில் ஏற்றுக்கொள்வதற்கான அதிகாரபூர்வப் பரிந்துரையை ஆசியான் வெளியிடுமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஆசியான் விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறைத் தொடர்பாளரான டாக்ஸ் இம்பீரியல் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.

எனினும், தலைவர்களின் கூட்டத்திற்குப் பிறகு ஒருமித்த கருத்துகளுடன் தயாராகும் ஆவணத்தில் அந்த இறுதி முடிவு பிரதிபலிக்கும் என்று அவர் கூறினார்.

பசாய் நகரில் உள்ள அனைத்துலக ஊடக மையத்தில் அந்தச் செய்தியாளர் கூட்டம் நடந்தது.

மியன்மார் நாட்டில் 2021ஆம் ஆண்டு ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து, அந்த ஆண்டு முதல் ஆசியான் கூட்டங்களில் அரசியல் சார்பற்ற மியன்மார் பிரதிநிதிகளுக்கு மட்டுமே அனுமதி எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

“தற்போதைய நிலையில் ஆசியானுடன் மீண்டும் ஈடுபடவும், ஆசியானுக்குத் திரும்பவும் மியன்மார் தரப்பில் விருப்பம் உள்ளது,” என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கேட்கியூ கூறியுள்ளார்.

49வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் மியன்மார் தலைவர்கள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மியன்மாரின் ஆசியான் விவகாரங்களுக்கான வெளியுறவு அமைச்சின் தலைமை இயக்குநர் மாநாட்டில் கலந்துகொள்கிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்