மணிலா: மத்திய கிழக்குப் போரினால் ஏற்பட்டுள்ள பொருளியல் பாதிப்புகளை எவ்வாறு கையாள்வது குறித்து, இவ்வாண்டு மே மாதம் பிலிப்பீன்ஸ் நடத்தவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் விவாதிக்கப்படும் எனப் பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நடந்த அந்நாட்டின் தேசியக் காவல்துறை பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாண்டு மே 8, 9ஆம் தேதிகளில் பிலிப்பீன்சில் நடைபெறவுள்ள 11 நாடுகள் பங்கேற்கும் ஆசியான் கூட்டத்தில் எரிசக்தி, உணவு, குடியேற்றம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.
மேலும், வட்டாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ள எரிசக்தி நெருக்கடி காரணமாக, இந்த மாநாட்டை ஒத்திவைப்பது குறித்து பிற ஆசியான் உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், தற்போதைய சூழலில் ஆலோசனை அவசியம் என்பதால் மாநாட்டைத் திட்டமிட்டபடி நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“நெருக்கடி நிலையைச் சமாளிக்க நாம் என்ன செய்ய வேண்டும், ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவலாம், நாம் எதிர்நோக்கும் ஆபத்து குறித்து ஆசியான் நாடுகளின் நிலைப்பாடு ஆகியவற்றை தலைவர்கள் ஒன்றிணைந்து தீர்மானிப்பதே தற்போது நமக்கு மிகவும் அவசியமான ஒன்று,” என அவர் குறிப்பிட்டார்.

