தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
ஆசியான் தலைமைச் செயலாளர் காவ் கிம் ஹோர்ன் பாராட்டு

ஆசியானின் முயற்சி தாய்லாந்து- கம்போடிய பூசலைத் தணிக்க உதவியது

2 mins read
a6a12ce3-18d3-4950-9e11-a064d4fe232c
ஆசியானின் தலைமைச் செயலாளர் டாக்டர் காவ் கிம் ஹோர்ன் 17வது ஆசியான், ஆசிய மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பத்தாண்டுகளில் இல்லாத வகையில் உறுப்பு நாடுகளுக்கு இடையே மூண்ட கடுமையான சண்டையை நிறுத்துவதில் ஆசியானின் தலையீடு முக்கிய பங்களித்திருப்பதாக ஆசியானின் தலைமைச் செயலாளர் காவ் கிம் ஹோர்ன் தெரிவித்துள்ளார்.

கம்போடியா - தாய்லாந்து எல்லையில் ஜூலை மாதம் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற வேளையில், ஆசியான் துரிதமாகவும் விவேகமாகவும் செயல்பட்டது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் டாக்டர் காவ் குறிப்பிட்டார்.

“நிலைமையைக் கட்டுக்குள் வைத்து சண்டையைத் தணிக்க முற்பட்டது ஆசியான் மேற்கொண்ட ஆக்ககரமான பணி என்று கருதுகிறேன். அதன் பிறகுதான் ஆசியான் இருநாடுகளுக்கும் இடையில் சமரசப் பேச்சை நடத்தியது,” என்றார் அவர்.

ஆழமான அரசியல் பிரச்சினைகளைக் களைவதற்குப் பதிலாகச் சண்டையை முதலில் சமாளிப்பதில் ஆசியான் கவனம் செலுத்தியது என்ற டாக்டர் காவ், தாய்லாந்திலும் கம்போடியாவிலும் உள்ள உள்நாட்டு நிலைமைகள் சமரசம் பேசுவதைச் சிரமமாக்கியிருப்பதாகக் கூறினார்.

ஆசியானுக்கு இவ்வாண்டு தலைமைதாங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், அவசர கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ததை அடுத்து கடந்த மாதம் 28ஆம் தேதி கோலாலம்பூரில் கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் சண்டை நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.

அமெரிக்காவும் சீனாவும் ஆதரவளித்த அந்தப் பேச்சுவார்த்தையில் கம்போடியப் பிரதமர் ஹன் மனெட்டும் தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் பும்தாம் விசாயசாயும் நேருக்கு நேர் சந்தித்தனர். அதைத்தொடர்ந்து ஐந்து நாள் நீடித்த சண்டை நிறுத்தம் நிறுத்தப்பட்டது. அதில் 40 பேர் மாண்டனர், 300,000 பேர் வீடுகளை இழந்தனர்.

ஆசியான் தலையீடு, குறிப்பாக திரு அன்வாரால் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் நிலைமை கைமீறிச் செல்வதைத் தவிர்த்தது என்றார் டாக்டர் காவ்.

“மலேசியப் பிரதமர் நிலைமையைச் சமாளிக்க துரிதமாகச் செயல்பட்டார். ஆசியான் இன்னும் எவ்வளவு அவசியமாக இருக்கிறது என்பதை அது காட்டுகிறது,” என்ற டாக்டர் காவ், மலேசியாவின் உடனடி அரசதந்திர முயற்சியைப் பாராட்டினார்.

கம்போடியரான டாக்டர் காவ், “ஆசியானின் தலைமைச் செயலாளராகத்தான் நான் என் கடமைகளைச் செய்யவேண்டும். கம்போடியாவின் பிரதிநிதியாக அல்ல,” என்றார்.

2022ஆம் ஆண்டு ஆசியானின் தலைமைச் செயலாளராக டாக்டர் காவ் பொறுப்பேற்றபோது ‘தாம் ஒரு கம்போடியர் அல்ல’ என்பதை நினைவில் வைத்துக்கொள்ளும்படி கம்போடியத் தலைவர்கள் அவருக்கு அறிவுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்