தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நமது கட்டுப்பாட்டில் உள்ளவற்றில்தான் ஆசியானின் கவனம்: அன்வார்

2 mins read
cc54b67f-c55f-4e92-a536-2c751bd001ae
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புத்ராஜெயா: தொடரும் உலகளாவியப் பூசல்களுக்குப் பதிலாக ஆசியான், நேரடியாகக் கையாளக்கூடிய இவ்வட்டாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில்தான் ஆசியான் நிதி அமைச்சர்கள் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்காசியா தொடர்ந்து அமைதியான வட்டாரமாக இருப்பற்குத் தெளிவான இலக்குகள், வலுவான தலைமைத்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்டே வட்டார அளவிலான மேம்பாடு இடம்பெறவேண்டும் என்று இந்தோனீசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற ஆசியான் உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் ஒப்புக்கொண்டதாக திரு அன்வார் கூறினார்.

“ர‌ஷ்யா-உக்ரேன் போர், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளியல் பதற்றம் போன்ற பூசல்கள் நமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை.

“அதனால், இவ்வட்டாரத்தை அமைதியான பகுதியாக நிலைநாட்டுவதற்கு நமது கட்டுப்பாட்டில் இருக்கும் விவகாரங்களில் கவனம் செலுத்துகிறோம். சக்திவாய்ந்த நாடுகளுக்கிடையிலான விரோதத்தில் நாம் சிக்கிக்கொள்ளாமல் தெளிவான இலக்குகள், வலுவான தலைமைத்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்டே வட்டார அளவிலான மேம்பாடு இடம்பெறவேண்டும் என்பது ஆசியான் நிதி அமைச்சர்கள் சந்திப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது,” என்று திரு அன்வார் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) நடந்த மலேசிய நிதி அமைச்சின் சந்திப்பில் கூறியதாக மலாய் மெயில் ஊடகம் தெரிவித்தது. அச்சந்திப்பு, மாதந்தோறும் நடந்துவரும் ஒன்று.

உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றின் அக்கறைகளுக்கும் முன்னுரிமை தரும் அதேவேளையில் ஆசியான், எல்லா நாடுகளுடனும் நல்லுறவை வைத்துக்கொண்டு நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும் திரு அன்வார் குறிப்பிட்டார்.

இந்நிலையில், வட்டார அளவில் எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்தும் இலக்குடன் எரிசக்தி உருமாற்றுத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த ஆசியான் முனைப்புடன் இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். வியட்னாமிலிருந்து லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் வழியாக மலேசியாவுக்கு எரிசக்தியைத் தருவிக்க வகை செய்யும் ஒப்பந்தங்களில் ஆறு நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாகவும் திரு அன்வார் சொன்னார்.

பொருளியல் ரீதியாக ஆசியானுக்குப் பங்களிக்கம் நாடுகளுடனான நிதி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் எல்லை தாண்டிய கட்டண முறைத் தொடர்புகளை ஆசியான் வலுப்படுத்தி வருவதாகவும் திரு அன்வார் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்