அமெரிக்காவுடன் யுஎஸ் 30 பில்லியன் டாலர் ஒப்பந்தங்களை மேற்கொள்ள ஆசியா இலக்கு

அமெரிக்காவுடன் யுஎஸ் 30 பில்லியன் டாலர் ஒப்பந்தங்களை மேற்கொள்ள ஆசியா இலக்கு

2 mins read
தோக்கியோவில் நடைபெறும் அமைச்சர்நிலை மாநாட்டில் ஆஸ்திரேலியா, தென்கொரியா, பங்ளாதேஷ் உள்ளிட்ட 18 நாடுகள் பங்கேற்பு
24265a37-8232-465e-8a0c-b6f90cd5b65b
பல்வேறு தயாரிப்புகள், துறைகளின் பரவலான கொள்முதல் கடப்பாடுகள், பிற பரிவர்த்தனைகளின் ஒப்பந்தங்கள் இடம்பெறும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறினர். - படம்: புளூம்பர்க்

வாஷிங்டன்: எரிசக்தி, முக்கியக் கனிம வளங்கள் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்க நிறுவனங்களுடன் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய-பசிபிக் நாடுகள் இந்த வார இறுதியில் கிட்டத்தட்ட 30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளன.

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் இதற்காக தோக்கியோ வந்துள்ளனர்.

நிலக்கரி, எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, அணுசக்தி போன்ற பல்வேறு துறைகளில் இந்த வணிக உடன்பாடுகள் எட்டப்படவுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்ததாக புளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஆதரவில் தோக்கியோவில் முதன்முறையாக இந்தோ-பசிபிக் எரிசக்திப் பாதுகாப்பு அமைச்சர்நிலை மாநாடும் வர்த்தகக் கருத்தரங்கும் நடைபெறுகின்றன.

இந்த இரு நாள் மாநாட்டில் ஆஸ்திரேலியா, தென்கொரியா,பங்ளாதேஷ் உள்ளிட்ட 18 நாடுகள் பங்கேற்கின்றன.

ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி மார்ச் 19ஆம் தேதி வாஷிங்டன் செல்கிறார். அடுத்த மூன்று வாரங்களில் அதிபர் டிரம்ப் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இச்சூழலில் இம்மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

கைப்பேசிகள், மின்கலன்கள், ஜெட் இயந்திரங்கள் தயாரிப்பிற்குத் தேவையான முக்கியக் கனிமங்களுக்குச் சீனாவைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றியமைக்க வாஷிங்டன் முயன்று வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வணிகப் பூசல்களால் கனிம விநியோகம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது விநியோகச் சங்கிலியைப் பன்முகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலும் கத்தாரின் எரிவாயு விநியோகத் தடைகளும் உலக நாடுகளுக்குப் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன.

நம்பகமான நாடுகளுடன் இணைந்து எரிசக்திப் பாதுகாப்பை உறுதிசெய்வது, வட்டார நிலைத்தன்மைக்கும் பொருளியல் வளர்ச்சிக்கும் அவசியம் என அமெரிக்க உள்துறை அமைச்சர் டக் பர்கம் தெரிவித்தார்.

ஜப்பான், அமெரிக்க அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள், அடுத்த வாரம் நடைபெறவுள்ள டிரம்ப் - தக்காய்ச்சி சந்திப்பிற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்