கிரிக்கெட்டில் கால்பதிக்க அரசதந்திரத்தைக் கையில் எடுத்தது ஜப்பான்

கிரிக்கெட்டில் கால்பதிக்க அரசதந்திரத்தைக் கையில் எடுத்தது ஜப்பான்

2 mins read
செப்டம்பர் 22ஆம் தேதி இந்திய அணியுடன் மோதல்
3ae50a5f-7397-43b3-8cab-4b0ea032c671
மத்திய ஜப்பானின் நகோயோ நகரில் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் குறித்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

பேஸ்பால் விளையாட்டு முதன்மையாக விளங்கும் ஜப்பான் கிரிக்கெட் போட்டிகளை ஏற்றுநடத்தத் தயாராகி வருகிறது.

அந்நாட்டின் வரலாற்றில் இல்லாத வகையில், இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டும் இடம்பெறுகிறது.

இந்தியா உட்பட கிரிக்கெட் உலகில் புகழ்பெற்றுள்ள நாடுகள் அடுத்த வாரம் ஜப்பானிய மண்ணில் திறன்காட்டவிருக்கின்றன.

ஜப்பான் கிரிக்கெட் சங்கம் பல ஆண்டுகளாக அதற்கான அடித்தளப் பணிகளை மேற்கொண்டதன் விளைவாக இது சாத்தியமாகியிருக்கிறது. அரசதந்திர முயற்சிகள், பெருநிறுவனங்களின் ஆதரவுடன் நாட்டில் இந்த விளையாட்டு வேரூன்ற சங்கம் பல முயற்சிகளை எடுக்கிறது.

டி20 உலகக் கிரிக்கெட் வெற்றியாளரான இந்தியாவுடன் இம்மாதம் 22ஆம் தேதி சானோவில் ஜப்பானிய அணி பொருதுகிறது. இது மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் முழு உறுப்பு நாடு ஒன்றுடன் இணை உறுப்பு நாடான ஜப்பான் பொருதவிருப்பது இதுவே முதன்முறை.

முன்னாள் உலக வெற்றியாளர்களான பாகிஸ்தான், இலங்கை ஆகியவற்றுடன் டெஸ்ட் போட்டிகளில் பங்கெடுக்கும் பங்ளாதே‌‌‌ஷும் ஆஃப்கானிஸ்தானும் இம்மாதம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பொருதவிருக்கின்றன.

புதிய யுகம்

ஜப்பானிய கிரிக்கெட் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நாவோகி அலெக்ஸ் மியாஜி புதிய வாய்ப்பைக் கண்டு உற்சாகமாக இருக்கிறார்.

இரண்டு வார கிரிக்கெட்டால் என்ன சாதிக்க முடியும் என்பதைப் பற்றி அவர் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளார்.

ஜப்பானில் 7,300 பதிவுசெய்த ஆட்டக்காரர்கள் இருக்கின்றனர். அங்கு 16 கிரிக்கெட் திடல்களும் உள்ளன.

“ஒரு போட்டியோ தொடரோ எதையும் மாற்றியமைத்து விடாது. அத்துடன், திடீரென்று ஜப்பானில் பேஸ்பால் அல்லது காற்பந்துபோல இது பிரபலமாகிவிடும் என்றும் நாங்கள் நிச்சயமாக நினைக்கப் போவதில்லை,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் மியாஜி கூறினார்.

“ஆனால், இந்தியாவிற்கு எதிரான இந்தப் போட்டி ஒரு புதிய யுகத்தின் முதல் பக்கம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்