தோக்கியோ: செயற்கை நுண்ணறிவுத் துறையின் உலகளாவிய வளர்ச்சி காரணமாகக் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆசிய நாடுகளில் உற்பத்தித் துறை வளர்ச்சி கண்டுள்ளதாகத் தனியார் நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரான்மீது தொடுத்த போரினால் ஏற்பட்ட எரிபொருள், எரிசக்தி விலை உயர்வால் கவலையில் இருந்த கொள்கை வகுப்பாளர்களுக்கு இச்செய்தி ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
கணினிச் சில்லுகளுக்கும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொருள்களுக்கும் உலகளவில் வலுவான தேவை இருந்துவருகிறது. இதனால், ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் ஜப்பான், தென்கொரியா, தைவான் ஆகிய நாடுகளில் உற்பத்தித்துறை நல்ல வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
மோசமான வானிலை பாதிப்புகள் குறைந்ததை அடுத்து, சீனாவிலும் செப்டம்பர் மாதத்தில் தொழிற்சாலை செயல்பாடுகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.
குறிப்பாக, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தென்கொரியாவின் ஏற்றுமதி சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. அதன் காரணமாக, அந்நாட்டின் உற்பத்தித்துறையும் கடந்த நான்கு மாதங்களில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
தென்கொரியாவில் கடந்த ஆகஸ்ட்டில் 52.3ஆக இருந்த தொழில், சேவைத்துறையின் வளர்ச்சியைக் குறிக்கும் ‘பிஎம்ஐ’ குறியீடு, அதற்கடுத்த செப்டம்பர் மாதத்தில் 53.9ஆக உயர்ந்தது. கடந்த மே மாதத்திலிருந்து இதுவே ஆக அதிகமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பத்தாவது மாதமாக அக்குறியீடு 50க்குமேல், அதாவது வளர்ச்சி நிலையிலேயே இருக்கிறது.
அதுபோல், தைவானும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனை அறுவடை செய்து வருகிறது. அங்குக் கடந்த ஆகஸ்ட்டில் 54.7ஆக இருந்த பிஎம்ஐ குறியீடு, செப்டம்பரில் 56.7ஆகக் கூடியது.
ஜப்பானைப் பொறுத்தமட்டில், பிஎம்ஐ குறியீடு 54.9லிருந்து 54.1 எனச் சற்றே இறங்கியது. ஆயினும், வெளிநாடுகளிலிருந்து வரும் கோரிக்கைகள் வலுவாக உள்ளதால் அதன் ஏற்றுமதிக் கோரிக்கைகள் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக ஏறுமுகத்தில் பதிவாயின.
அதே நேரத்தில், உற்பத்திச் செலவின நெருக்கடி நீடிப்பதால் நிறுவனங்கள் விற்பனை விலையை உயர்த்தியுள்ளன.
இந்தோனீசியாவிலும் வியட்னாமிலும் உற்பத்தித்துறை வளர்ச்சி கண்டுள்ளது. மாறாக, பிலிப்பீன்சிலும் மலேசியாவிலும் அது சரிவைச் சந்தித்துள்ளதாக ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன.
