மணிலா: பிலிப்பீன்சின் கோட்டபாட்டோ மாநிலம், மாட்டலேம் நகரில் சாலையோரமாக நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது கையெறிகுண்டு வீசப்பட்டதில் 22 பேர் காயமடைந்தனர்.
புத்தாண்டு பிறந்த நள்ளிரவுக்குச் சற்று நேரத்திற்குப் பிறகு இத்தாக்குதல் நிகழ்ந்தது.
அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் சென்ற இருவர் கையெறிகுண்டை வீசியதாகக் காவல்துறை தெரிவித்தது.
இதனையடுத்து, அவர்களை அடையாளம் கண்டு, கைதுசெய்வதற்காகக் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளியை விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே, கோட்டபாட்டோ ஆளுநர் எம்மிலோ மெண்டோசா இத்தாக்குதலுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
“எங்கள் மாநிலத்தில் வன்முறைக்கு இடமில்லை,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நல்ல வேளையாக உயிரிழப்பு ஏதுமில்லை எனக் குறிப்பிட்ட அவர், காயமுற்றோருக்கு உதவவும் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், சந்தேகப் பேர்வழிகளை அடையாளம் கண்டு, நீதியின்முன் நிறுத்தவும் காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

