ஈரான் மீது தாக்குதல்: மத்திய கிழக்கில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு தூதரகம் அறிவுரை

ஈரான் மீது தாக்குதல்: மத்திய கிழக்கில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு தூதரகம் அறிவுரை

படம்: ஏஎஃப்பி

28 Feb 2026 - 7:54 pm

2 mins read

ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல்களை சனிக்கிழமை (பிப்ரவரி 28) தொடங்கியுள்ளன.

மத்தியக் கிழக்கில் உள்ள சிங்கப்பூர் தூதரகங்களும் வெளியுறவு அமைச்சின் துணை அலுவலகங்களும் அவ்வட்டாரத்தில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளன.

கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதுடன் உள்ளூர் அரசாங்கங்கள் விடுக்கும் அறிவிப்புகளைக் கேட்டு நடந்துகொள்ளும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வட்டாரத்தில் நடக்கும் நிலவரங்களை அறிந்துவைத்துக்கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அன்று வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் பதிவில் தோஹாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் “அனைவரும் அவரவர் இல்லங்களில் அல்லது பாதுகாப்பான இடங்களில் கண்டிப்பாக இருக்கவேண்டும். ஆபத்து தணியும் வரை, அவசரத் தேவையின்றி வெளியில் வர வேண்டாம்,” என்று எச்சரித்துள்ளது.

பொதுப் பாதுகாப்பைக் கருதி, ராணுவத் தளவாடங்களுக்கு அருகில் செல்லவேண்டாம் எனவும் அங்குள்ள மக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.

அபு தாபியில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளதை அங்குள்ள சிங்கப்பூர் தூதரகமும் துபாயில் உள்ள வெளியுறவுத் துணை அலுவலகமும் அறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் உள்ள சிங்கப்பூரர்கள் பாதுகாப்பான இடங்களில் இருந்துகொள்ளுமாறு அவ்விரு சிங்கப்பூர் அலுவலகங்களும் கேட்டுக்கொண்டுள்ளன.

மத்தியக் கிழக்கு வட்டார விமானப் பயணங்கள் ரத்தாகும் வாய்ப்புள்ளதால் பயணிகள் விமானச் சேவைகள் குறித்து அந்தந்த நிறுவனங்களிடம் தொடர்புகொண்டு உறுதி செய்துகொள்ளுமாறு எகிப்தில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அதன் ஃபேஸ்புக் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், மத்தியக் கிழக்கிற்கான அதன் பயணங்களும் ஸ்கூட் விமானப் பயணங்களும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. மேல் விவரங்களுக்கு பயணிகள் அதன் இணையத் தளத்தை நாடலாம்.

மத்தியக் கிழக்கில் இயங்கும் சிங்கப்பூர் தூதரகங்கள், அவ்வட்டாரத்தில் உள்ள சிங்கப்பூரர்கள், வெளியுறவு அமைச்சுடன் அவர்களது தொடர்பு விவரங்களை பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளன.

அதற்கான இணையத் தளம்: https://eregister.mfa.gov.sg

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சுக்கான மத்தியக் கிழக்குத் தூதரகத் தொடர்பு எண்: +65-6379-8800/8855.

குறிப்புச் சொற்கள்
ஈரான்இஸ்ரேல்அமெரிக்காபோர் விமானம்தாக்குதல்