லண்டன்: பிரிட்டிஷ் காவல்துறையினர், வடமேற்கு லண்டனில் ஈரான் இன்டர்நேஷ்னல் தொலைக்காட்சி நிலையத்தின் மூன்று அலுவலகங்களைத் தீயிட்டுக் கொளுத்த முயன்ற மூவர்மீது வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட மூவருமே பிரிட்டிஷ் குடிமக்கள். அவர்களில் இருவர் ஆண்கள், மற்றவர் பதின்ம வயதினர். எரிந்துகொண்டிருந்த கொள்கலனை ஈரான் இன்டர்நேஷ்னலின் தாய் நிறுவனமான ‘வோலன்ட் மீடியா’மீது அவர்கள் புதன்கிழமை வீசியதாகக் கூறப்பட்டது. கார்கள் நிறுத்துமிடத்தில் அந்தக் கொள்கலன் விழுந்தது.
நெருப்பு உடனடியாகத் தானாகவே அணைந்தது. யாருக்கும் காயமோ எதற்கும் சேதமோ ஏற்படவில்லை.
லண்டனைத் தளமாகக் கொண்ட ஈரான் இன்டர்நேஷ்னல் தொலைக்காட்சி நிறுவனம், டெஹ்ரான் அரசாங்கத்தைக் குறைகூறிவருகிறது. சந்தேகத்திற்குரிய வாகனம், லண்டன் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டதாக அது கூறியது. அதன் பிறகே நெருப்பு மூட்டப்பட்ட கொள்கலன் அலுவலகத்தை நோக்கி வீசப்பட்டது.
21 வயது ஓஷீன் மெக்கின்னஸ், 19 வயது நேதன் டன் ஆகியோருடன் 16 வயது இளையர்மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டையும் மெக்கின்னஸ் எதிர்நோக்குகிறார்.
சம்பவ இடத்திலிருந்து வெளியேறிய வாகனம், அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டதாகக் காவல்துறையினர் கூறினர்.
இவ்வாரம் செவ்வாய்க்கிழமை லண்டனின் வடக்கே, யூத ஆலயமொன்றைத் தீவைத்துக் கொளுத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் இருவரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

