தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவில் பெட்ரோல் குண்டுகளால் தாக்குதல்; எண்மர் காயம்

2 mins read
3c20d2dc-fad6-4574-a741-f4091e12873a
சம்பவம் போல்டர் நகரில் நிகழ்ந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் ‘பாலஸ்தீனத்துக்கு விடுதலை தாருங்கள்’ (Free Palestine) என்று கத்தியபடி ஆடவர் ஒருவர் நடத்திய தாக்குதலில் எண்மர் காயமுற்றனர்.

கொலராடோ மாநிலத்தின் போல்டர் நகரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) அந்த 45 வயது ஆடவர் பெட்ரோல் குண்டுகளைக் கூட்டத்தின் மீது வீசி தாக்குதல் நடத்தினார்.

காஸா போரில் ஹமாஸ் அமைப்பு பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலியர்களை நினைவுகூரும் ஆர்ப்பாட்டத்தின்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமுற்ற அறுவர் 67லிருந்து 88 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவின் (எஃப்பிஐ) சிறப்பு அதிகாரி மார்க் மி‌ஷாலெக் குறிப்பிட்டார். காயமுற்றவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் குறைந்தது ஒருவர் கவலைக்கிடமாக இருக்கிறார்.

சந்தேக நபர், முகம்மது சொலிமான் எனும் ஆடவர் என்று திரு மி‌ஷாலெக் தெரிவித்தார். தாக்குதலுக்கு சிறிது நேரம் கழித்து சொலிமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

“முதற்கட்டத் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது இது சிலரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பது தெரிகிறது. எஃப்பிஐ இதை பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகிறது,” என்று அவர் சொன்னார்.

இந்தத் தாக்குதல் சிலரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என எஃப்பிஐ இயக்குநர் கே‌ஷ் பட்டேல் கூறினார். குறிவைக்கப்பட்ட மக்களைக் கருத்தில்கொள்ளும்போது இது வெறுப்பினால் மேற்கொள்ளப்பட்ட செயலைப் போல் தெரிவதாக கொலராடோ தலைமைச் சட்ட அதிகாரி ஃபில் வைசர் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதுலில் வேறு யாரும் ஈடுபடவில்லை எனத் தான் நம்புவதாக போல்டர் நகரக் காவல்துறைத் தலைவர் ஸ்டீஃபன் ரெட்ஃபர்ன் தெரிவித்தார்.

காஸாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பில் அமெரிக்காவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. அச்சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

பதற்றம் காரணமாக அமெரிக்காவில் யூதர்களுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. அதேவேளை, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வழிநடத்தலில், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் பழமைவாதிகள், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களை யூதர்களுக்கு எதிராக வெறுப்பைக் காட்டும் செயல் என்று வகைப்படுத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்