பேங்காக்: தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் கம்போடிய எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடும் கையெறிகுண்டுவீச்சும் நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.
‘சொங் அன் மா’ என்ற ‘உபன் ரட்சதானி’ மாவட்டத்திலிருக்கும் பகுதியை கம்போடியப் படையினர் தாக்கினர் என்று அங்கு இயங்கும் தாய்லாந்து படைப் பிரிவிடமிருந்து தகவல் கிடைத்ததாக தாய்லாந்து ராணுவப் பேச்சாளர் வின்தாய் சுவரீ அறிக்கை ஒன்றில் சனிக்கிழமை (செப்டம்பர் 27) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஆதரவுடன் ஆகஸ்ட் மாதம் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டுக்குப் பிறகு நடந்துள்ள முதல் ராணுவ மோதல் இதுவாகும். ‘சுரநாரி’ என்ற தாய்லாந்து ராணுவச் செயற்குழுவுக்கு முழு அவசரநிலையில் இருக்கவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருக்கவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திரு வின்தாய் சொன்னார்.
தாய்லாந்து பகுதியில் யாருக்கும் காயங்களோ மரணமோ ஏற்பட்டதற்கான தகவல் இல்லை.
கம்போடிய தேசிய தற்காப்பு அமைச்சு, அதன் ‘அன் சே’ ராணுவத் தளத்தின்மீது தாய்லாந்து ராணுவம் தொடக்கத்தில் சிறு ஆயுதத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தது.
நிலவரத்தைக் கண்காணிப்பதாகவும் நாட்டின் நிலப்பகுதிகளையும் தேசிய ஒருமைப்பாட்டையும் முழுமையாகத் தற்காக்க தயாராக இருப்பதாகவும் கம்போடிய ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்தது.