மணிலா: பிலிப்பீன்சின் பொதுநல சமூக அமைப்புகள், அந்நாட்டின் துணை அதிபர் சாரா டுட்டர்ட்டே மீது வழக்கு தொடரும் முயற்சியில் இறங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பீன்சின் நாடாளுமன்றக் குழுவான அக்பயான் பார்ட்டிலிஸ்ட் (Akbayan partylist) அத்தகவலை வெளியிட்டது. தங்களின் அரசியல் தலைவர் அந்த முயற்சியை அங்கீகரிப்பார் என்றும் அது குறிப்பிட்டது.
முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டேயின் மகளான திருவாட்டி சாரா டுட்டர்டேக்கும் தற்போதைய அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியருக்கும் பலத்த கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. திருவாட்டி டுட்டர்டே செய்த செலவுகள் குறித்து பிலிப்பீன்ஸ் நாடாளுமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
குற்றச்சாட்டுகளை திருவாட்டி டுட்டர்டே மறுத்து வருகிறார்.
வரலாற்று நிகழ்வான, வழக்குப் பதிவுசெய்யும் நோக்குடன் வரையப்பட்டுள்ள புகார் திங்கட்கிழமையன்று (டிசம்பர் 2) கீழவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அக்பயான் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. பொதுநல சமூக அமைப்புகள், சமயத் தலைவர்கள், திரு டுட்டர்டே மேற்கொண்ட போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தார் உள்ளிட்ட தரப்பினர் அந்தப் புகாரைச் சமர்ப்பிப்பர் என்று அக்பயான் குறிப்பிட்டது. திரு டுட்டர்டே மேற்கொண்ட போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
எந்த அடிப்படையில் திருவாட்டி டுட்டர்டே மீது வழக்கு பதிவுசெய்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்படும் என்பது குறித்து அக்பயான் விளக்கமளிக்கவில்லை.