வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இம்மாதம் 15ஆம் தேதி அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்திக்க இருப்பதாகத் தெரிவித்து உள்ளார். உக்ரேனில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும் உக்ரேனும் நிலப் பகுதிகளை மாற்றிக்கொள்ள வேண்டி வரலாம் என்று திரு டிரம்ப் கூறினார்.
திரு டிரம்ப்புடனான சந்திப்புக்கு முன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) திரு புட்டின் சீன, இந்தியத் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.
“எனக்கும் திரு புட்டினுக்கும் இடையில் நடைபெறும் என்று அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு அலாஸ்காவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி இடம்பெறும்,” என்று திரு டிரம்ப் தமது ட்ருத் சோஷல் பக்கத்தில் பதிவிட்டார்.
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் நன்மைபயக்கும் வகையில் நிலப்பகுதிகள் மாற்றியமைக்கப்படலாம் என்ற திரு டிரம்ப் அதுகுறித்த மேல் விவரங்களைக் குறிப்பிடவில்லை.
திரு டிரம்ப், திரு புட்டினுக்கு இடையிலான சந்திப்பின் தேதியையோ இடத்தையோ பற்றி ரஷ்யா உடனடியாக உறுதிசெய்யவில்லை.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே இதற்குமுன் நடைபெற்ற மூன்று சுற்று பேச்சுவார்த்தை எந்தப் பலனும் தரவில்லை. எனவே எதிர்வரும் சந்திப்பு அமைதியைக் கொண்டுவருவமா என்ற சந்தேகம் நிலவுகிறது.
போரை நிறுத்தும்படி அமெரிக்கா, ஐரோப்பா, உக்ரேன் ஆகியவை பலமுறை அழைப்புவிடுத்தும் திரு புட்டின் அவற்றுக்குச் செவிசாய்க்கவில்லை.
உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் இந்தக் கட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்றும் திரு புட்டின் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஜூலை மாதம் இஸ்தான்புல்லில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ரஷ்யத் தரப்புப் பேச்சாளர்கள் சண்டைநிறுத்தம் ஏற்பட வேண்டுமானால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு நிலப் பகுதிகளை ஒப்படைக்க வேண்டும் எனக்கூறினர்.
உக்ரேன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சில நிலப் பகுதிகளிலிருந்து பின்வாங்க வேண்டும் என்றும் மேற்கத்திய ராணுவ உதவியைக் கைவிடவேண்டும் என்றும் ரஷ்யப் பேச்சாளர்கள் தெரிவித்தனர்.