குடும்பத்தினரை அழைத்துவர வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா தடை

குடும்பத்தினரை அழைத்துவர வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா தடை

1 mins read
26334727-173d-4382-b08c-f6aac5642a33
தற்போது ஆண்டுக்கு ஏறத்தாழ 300,000ஆக இருக்கும் வெளிநாடுகளிலிருந்து குடியேறியவர்களின் நிகர எண்ணிக்கையை 2028ஆம் ஆண்டுக்குள் 225,000க்குக் குறைக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயிலும்போது தங்கள் வாழ்க்கைத் துணைவர்கள், பிள்ளைகள் ஆகியோரை அழைத்துவருவதைத் தடுப்பதற்கும் தற்காலிகக் குடியேறிகள் தங்களது விசா வகைகளை மாற்றுவதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்குவதற்கும் ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

வியாழக்கிழமை (செப்டம்பர் 17) ஆஸ்திரேலியாவின் தேசியச் செய்தியாளர் மன்றத்தில் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க் உரையாற்றுகிறார்.

தற்போது ஆண்டுக்கு ஏறத்தாழ 300,000ஆக இருக்கும் வெளிநாடுகளிலிருந்து குடியேறியவர்களின் நிகர எண்ணிக்கையை 2028ஆம் ஆண்டுக்குள் 225,000க்குக் குறைக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவிப்பார் என ‘ஏபிசி நியூஸ்’செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நடைமுறைப்படி, அனைத்துலக மாணவர்களின் கணவர் அல்லது மனைவி ஆஸ்திரேலியாவில் பணிபுரிய அனுமதி வழங்கப்படுகிறது. இருப்பினும், மாணவர்கள் பயிலும் பாடப் பிரிவைப் பொறுத்து வேலை நேரங்கள் மாறுபடும். மேலும், 18 வயதுக்குட்பட்ட தங்களது பிள்ளைகளையும் ஆஸ்‌திரேலியாவில் கல்வி பயில்வோர் தங்களுடன் அழைத்துவர முடியும்.

ஆஸ்திரேலியாவில் அண்மைக் கருத்துக்கணிப்புகளில் தீவிர வலசாரி ‘ஒன் நேஷன்’ கட்சிக்கான ஆதரவு கணிசமாக அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலிய மக்களின் நலன் கருதி அடுத்த மூவாண்டுகளில் தற்காலிகக் குடியேறிகளின் எண்ணிக்கையை 750,000 வரை குறைக்க வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்