ஏஐ காலத்திற்கு ஏற்ப சட்டங்களைப் புதுப்பிக்க ஆஸ்திரேலியா ஆலோசனை

ஏஐ காலத்திற்கு ஏற்ப சட்டங்களைப் புதுப்பிக்க ஆஸ்திரேலியா ஆலோசனை

சித்திரிப்பு: ராய்ட்டர்ஸ்

21 Nov 2026 - 8:29 pm

1 mins read

மெல்பர்ன்: தனிநபர்க்கான ‘ஏஐ ஏஜென்ட்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளைப் பயன்படுத்தும் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனைக் கையாளப் போட்டிச் சட்டங்கள் போதுமானவையாக இருப்பதை உறுதிசெய்ய ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

“ஆஸ்திரேலியர் பலரும் ‘ஏஐ ஏஜென்ட்’ மூலம் பொருள்களை வாங்குவர். எனவே, சட்டங்களைப் புதுப்பிப்பது அவசியமா என ஆராய்கிறோம்,” என்று உற்பத்தித்திறன், போட்டி, அறநிறுவனங்கள், கருவூலத்திற்கான துணை அமைச்சர் ஆண்ட்ரூ லீ, சனிக்கிழமை (நவம்பர் 21) கேன்பராவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பயனீட்டாளர்கள் சார்பாகப் பொருள்களை வாங்கவும் கட்டணம் செலுத்தவும் பணத்தை நிர்வகிக்கவும் இந்த ‘ஏஐ ஏஜென்ட்’ மென்பொருள்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்நிலையில், அவற்றிற்கு எவ்வளவு உரிமை வழங்குவது, அவற்றின் செயல்களுக்கு யார் பொறுப்பு என்பதை நிதி நிறுவனங்கள் ஆராய வேண்டியுள்ளது.

ஆஸ்திரேலியர்கள் பல ஆண்டுகளாக இணையவழியில் பொருள்களை வாங்குகின்றனர். இதனால், கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக இயங்கிவரும் டேவிட் ஜோன்ஸ் போன்ற புகழ்பெற்ற சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர் வருகை குறைந்துள்ளது.

இவ்வேளையில், தனிநபர் தரவுகளின் அடிப்படையில் வெவ்வேறு விலைகளை நிர்ணயிக்கும் ‘கண்காணிப்பு விலை நிர்ணய’ முறையை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் திரு லீ கூறினார். குற்றச்செயல்கள் அதிகம் பதிவாகும் பகுதிகளில் பாதுகாப்புப் பொருள்களுக்கு அதிக விலை கேட்கப்பட்ட வெளிநாட்டு எடுத்துக்காட்டை அவர் சுட்டிக்காட்டினார். ஏஐ மூலம் செயல்படும் இத்தகைய விலை நிர்ணயத்தால் ஆஸ்திரேலியர்கள் ஏமாற்றப்படாமல் இருப்பதையும் சிறந்த சலுகைகளைப் பெறுவதையும் அரசாங்கம் உறுதிசெய்ய விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்