சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 10,000க்கும் அதிகமான சொத்துகள் சேதமடைந்துள்ளன.
மேலும் வெள்ளத்தில் ஐந்து பேர் மாண்டனர். தற்போது அங்கு சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வெள்ளத்தால் நியூ செளத் வேல்ஸ் மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட விலங்குகளும் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சனிக்கிழமை நிலைமை ஆறுதல் தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளத்தில் சிக்கி 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் உள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து தரப்படும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்தார்.
அண்மை ஆண்டுகளாக ஆஸ்திரேலியா கடுமையான இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ என அந்நாடு பாதிக்கப்பட்டதற்குப் பருவநிலை மாற்றம் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

