சிட்னி: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் சீர்குலைவான உலகத் தலைமைத்துவத்தால் இம்மாதம் 3ஆம் தேதி நடந்த ஆஸ்திரேலிய தேர்தலில் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றுள்ளார்.
கனடாவில் மார்க் கார்னியின் ஆளும் லிபரல் கட்சி பதவியைத் தக்கவைத்துக் கொண்ட ஐந்தே நாள்களில் திரு ஆண்டனி அல்பனிசின் தொழிற்கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் 2004ஆம் ஆண்டு திரு ஜான் ஹாவர்ட் தொடர்ந்து இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தற்பொழுதுதான் ஒருவர் அதேபோல் இரண்டாவது முறையாக தேர்தல் வெற்றி பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் மே 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 77 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஆளும் தொழிற்கட்சி 55% வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஒப்புநோக்க, கடந்த 2022ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சிக்கு 52% வாக்குகளே கிடைத்தது என்பது நினைவுகூரத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் இரண்டாவது முறையாக தொடர் வெற்றி பெறும் கட்சி வழக்கமாக முந்தைய தேர்தலில் எடுத்த வாக்குகளைவிட குறைவாகவே பெற்று வந்துள்ளது. அந்த நிலை இப்பொழுது மாறியுள்ளது.
ஆளும் தொழிற்கட்சி தற்போதைய தேர்தலில் நாடாளுமன்றத்தின் 150 இடங்களில் இதுவரை 86 இடங்களைக் கைப்பற்றி தனது பெரும்பான்மையை அதிகரித்துள்ளது.
திரு டிரம்ப் அமெரிக்க அதிபராக ஜனவரி மாதம் பொறுப்பேற்பதற்கு முன் ஆஸ்திரேலியாவின் ஆளும் தொழிற்கட்சி தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்த நிலை தற்பொழுது மாறியுள்ளது. ஆனால், அமெரிக்காவுக்கு நெருங்கிய நட்பு நாடான ஆஸ்திரேலியா மீது அதிபர் டிரம்ப் வரி விதித்து அந்நாட்டுடனான பாரம்பரிய உறவு முறை சீர்குலைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், ஆஸ்திரேலியர்கள் இந்த நேரத்தில் மாற்றத்தை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.