சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநில முன்னாள் முதல்வர் கிளேடிஸ் பெரஜிக்லியான், தாம் ரகசிய உறவில் இருந்ததாகக் கூறிய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டேரில் மெக்குவாயருடன் இணைந்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
ஊழலை விசாரிக்கும் சுயேச்சை ஆணையம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
விசாரணையில் திருவாட்டி பெரஜிக்லியான், திரு மெக்குவாயர் ஊழலில் ஈடுபட்டிருக்கலாம் என்பது குறித்த தமது கவலையைத் தெரிவிக்கத் தவறியதாக ஆணையம் குறிப்பிட்டது. அதன் மூலம், முதல்வர் பொறுப்பில் உள்ளவருக்கான நடத்தை விதியை அவர் மீறியதாகக் கருதப்படுகிறது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையில் ஆணையத்திடம் திரு மெக்குவாயருடன் தாம் அணுக்கமான உறவில் இருந்ததாக திருவாட்டி பெரஜிக்லியான் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான மெக்குவாயர், சீன நாட்டவர்க்குத் தவறான முறையில் விசா வழங்கியது தொடர்பான ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 2012 முதல் 2018ஆம் ஆண்டு வரை அவர் ஆயிரக்கணக்கான டாலர் தொகையைப் பெற்றுக்கொண்டு அத்தகைய ஊழலில் ஈடுபட்டார்.


