நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும் ஆஸ்திரேலியா

நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும் ஆஸ்திரேலியா

2 mins read
ab70fcab-6b43-4215-9bb1-0fabec1a01a4
ஆஸ்திரேலியாவின் ஆம்பெர்லியின் உள்ள ஆகாயப் படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போயிங் ‘கோஸ்ட் பேட்’ வானூர்தி. - படம்: இபிஏ

ஆஸ்திரேலியா, நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

அதன்படி ராணுவ வானூர்திகளையும் ஆளில்லா போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் அது தயாரிக்கவிருக்கிறது.

இத்தகைய ஆயுதங்களை ஆசிய நாடுகளின் கடற்படைகள் வரவேற்கக்கூடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் மத்திய அரசாங்கம் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி 15 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள அடுத்த பத்து ஆண்டுகளில் ஆளில்லா மற்றும் தானியக்க சாதனங்களை உருவாக்குவதற்கான புதிய தற்காப்புத் திட்டத்தை வெளியிட்டது.

அப்போது, மத்திய கிழக்கு மற்றும் உக்ரேனியப் போரில் ஆளில்லா வானூர்திகள் முக்கியப் பங்காற்றியதை அது சுட்டிக்காட்டியது.

ஆகாயம், நிலம் மற்றும் கடல் சார்ந்த ஆளில்லா அமைப்புகள், உளவு, கண்காணிப்பு மற்றும் வேவு பார்க்கும் திறன்களை வலுப்படுத்துவதோடு கப்பலில் ஆள்கள் இல்லாமலேயே துல்லியமான தாக்குதல்களை நடத்த முடியும். ஆஸ்திரேலியா ஏற்கனவே அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்களையும் விமானங்களையும் உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் வானூர்திகள் மற்றும் ஆளில்லா அமைப்புகளில் முதலீடு செய்யும் முடிவை ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் வரவேற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா, ஜூன் 30ஆம் தேதி முடிவடையும் ஆண்டில், பாதுகாப்புக்காக 58.4 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களைச் செலவிடவுள்ளது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.03 விழுக்காடாகும். இது, முந்தைய ஆண்டில் செலவிடப்பட்ட 55.5 பில்லியன் ஆஸ்திரேலிய டாலரைவிட அதிகம்.

புதிய சாதனங்களில், ‘கோஸ்ட் பேட்’ என்ற ஆளில்லா போர் விமானமும் அடங்கும்.

இது, மணிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் 3,700 கி.மீ. வரை பயணம் செய்யக்கூடியது. மனிதர்கள் இயக்கும் விமானங்களுடன் இணைந்தும் அது செயல்பட முடியும். ஆகாயத்திலிருந்து ஆகாய இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளையும் இதில் பொருத்த முடியும்.

குறிப்புச் சொற்கள்