காட்டுத்தீயைச் சமாளிக்கத் தயாராகும் ஆஸ்திரேலியா

காட்டுத்தீயைச் சமாளிக்கத் தயாராகும் ஆஸ்திரேலியா

1 mins read
0b47f5c5-c656-450b-817b-0829010bb177
காடுகளின் சில பகுதிகளை ஆஸ்திரேலிய அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் எரித்து வருகின்றனர். இது காட்டுத்தீ விரைவாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சிட்னி: ஐரோப்பாவில் கடுமையான கோடைக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் ஆஸ்திரேலிய தீயணைப்பு வீரர்கள் தீவிர விழிப்புநிலையில் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் ‘எல் நினோ’ பருவநிலை நிலவுவதால், அதிக வெப்பமும் வறண்ட வானிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் காட்டுத்தீ உருவாவதற்கான அபாயம் மிகவும் அதிகரித்துள்ளது.

முந்தைய ஆண்டுகளைவிட இந்த ஆண்டு காட்டுத்தீ அபாயம் அதிகம் என்று நியூ சவுத் வேல்ஸ் ஊரகத் தீயணைப்புப் படையின் தலைவர் ட்ரென்ட் கர்டின் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்குக் காட்டுத்தீ பாதிப்புகள் புதிதல்ல. 2019, 2020 ஆண்டுகளில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீப் பேரிடரில் 33 பேர் உயிரிழந்தனர். துருக்கி நாட்டின் அளவிலான நிலப்பகுதி அப்போது எரிந்து நாசமானது.

காட்டுத் தீ அபாயத்தைக் குறைக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். காடுகளின் சில பகுதிகளை அவர்கள் பாதுகாப்பான முறையில் எரித்து வருகின்றனர். இது காட்டுத்தீ விரைவாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும்.

அக்டோபர் மாத மத்தியில் வடக்கு நியூ சவுத் வேல்ஸ் பகுதியிலும், டிசம்பர் மாதத்தில் மாநிலத்தின் தெற்குப் பகுதிகளிலும் காட்டுத்தீயின் அபாயம் அதிகமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்