பணி விடுமுறை அனுமதிச்சீட்டுகளின் உச்சவரம்பை உயர்த்தியது ஆஸ்திரேலியா

பணி விடுமுறை அனுமதிச்சீட்டுகளின் உச்சவரம்பை உயர்த்தியது ஆஸ்திரேலியா

படம்: ராய்ட்டர்ஸ்

17 Nov 2026 - 10:56 am

1 mins read

சிட்னி: பணி விடுமுறை அனுமதிச்சீட்டுடன் கூடுதல் வெளிநாட்டுப் பயணிகள் ஆஸ்திரேலியாவில் தங்க முடியும் என்றும், ஆனால் அவர்கள் கிராமப்புறப் பகுதிகளில் நீண்ட காலம் பணியாற்ற வேண்டும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் நவம்பர் 17 தேதி தெரிவித்தது.

திட்டமிடப்பட்ட குடியேற்றக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வகையில் இவ்வறிவிப்பு வெளியானது.

வலதுசாரிக் கட்சியான ‘ஒன் நேஷன்’ கட்சியின் அதிகரித்துவரும் செல்வாக்கு, வீட்டுப் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக, ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீசியின் அரசாங்கம் குடியேற்றத்தைக் குறைப்பதாகக் கடந்த செப்டம்பர் மாதம் உறுதியளித்தது.

ஆனால், இளம் பணி விடுமுறைப் பயணிகளின் நுழைவைக் குறைத்தது, அப்பயணிகளை நம்பியிருக்கும் கிராமப்புறத் தொழில் முதலாளிகளிடையே கடும் எதிர்ப்பைத் தூண்டியது.

மூன்றாம் ஆண்டாக ஆஸ்திரேலியாவில் தங்க விரும்பும் பணி விடுமுறைப் பயணிகளுக்கான திட்டமிடப்பட்ட உச்சவரம்பு வரும் 2027ஆம் ஆண்டில் 5,000 இடங்களிலிருந்து 25,000ஆக உயர்த்தப்படும் என உள்துறை அமைச்சர் டோனி பர்க் நவம்பர் 17ஆம் தேதி கூறினார்.

கடந்த 2025ஆம் ஆண்டில் 31,000 மூன்றாம் ஆண்டு அனுமதிச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

மேலும், 2026ஆம் ஆண்டு முதல் இரண்டாம் ஆண்டு அனுமதிச்சீட்டுகள் 45,000ஆகக் குறைக்கப்பட்டன. அதற்கான கிராமப்புறப் பணித் தேவையும் மூன்று மாதங்களிலிருந்து நான்கு மாதங்களாக அதிகரிக்கும்.

இம்மாற்றங்கள், கிராமவட்டாரங்களுக்குக் கூடுதல் ஊழியர்களைத் தருவதுடன் நிகர வெளிநாட்டுக் குடியேற்றத்தைக் குறைக்கும் என்றும் அமைச்சர் பர்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்