ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க பரிந்துரை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க பரிந்துரை

படம்: பிக்சாபே

07 Nov 2024 - 12:43 pm

2 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிப்பதற்கான சட்டத்தை இயற்றப்போவதாக அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்துள்ளார்.

உலகை வழிநடத்தும் கொள்கை அது என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டது.

அந்தத் தடை 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடப்புக்கு வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

“சமூக ஊடகம் நமது குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கிறது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்,” என்று திரு அல்பனிஸ் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.

சமூக ஊடகத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் குழந்தைகளின் உடல், மனநலத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களை அவர் சுட்டினார்.

16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டம் 2024ல் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஒப்புதல் அளித்த 12 மாதங்களில் அது நடப்புக்கு வரும் என்று திரு அல்பனிஸ் கூறினார்.

இந்நிலையில், எதிர்த்தரப்பு மிதவாதக் கட்சியும் அந்தத் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

பெற்றோர் அனுமதி உள்ளவர்களுக்கோ ஏற்கெனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கோ விலக்கு அளிக்கப்படாது.

“அனுமதியைத் தடுக்க, தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதைக் காட்டுவது சமூக ஊடகத் தளங்களின் பொறுப்பாகும். அது பெற்றோர், இளையோரின் கடமை அல்ல,” என்று திரு அல்பனிஸ் கூறினார்.

பாதிக்கப்பட்ட தளங்களில், ‘மெட்டா’வின் இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், டிக்டாக், எலான் மஸ்க்கின் ‘எக்ஸ்’ ஆகியவை அடங்கும் என்று தொடர்புத் துறை அமைச்சர் மிஷெல் ரோலண்ட் கூறினார்.

‘அல்ஃபபெட்’ நிறுவனத்தின் யூடியூப் தளமும் அதே விதிமுறையின்கீழ் வரும் என்றார் அவர்.

இதன் தொடர்பில், டிக்டாக், மெட்டா, ‘எக்ஸ்’, ‘அல்ஃபபெட்’ ஆகியவை கருத்து தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்