ஆஸ்திரேலிய வெள்ளம்; விவசாயிகளுக்கு உதவிக்கரம்

2 mins read
e3d9dc89-a765-4e93-8cca-cfe74f32dd06
வெள்ளத்தால் சாலைக் கட்டமைப்புகள் மோசமடைந்துள்ளதால் ஆங்காங்கே மக்கள் தனியாகத் தவித்து வருகின்றனர்.  - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேலஸ் மாநிலத்தில் சில நாள்களுக்கு முன்பு கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதில் 10,000க்கும் அதிகமான சொத்துகள் சேதமடைந்தன. ஐந்து பேர் மாண்டனர்.

தற்போது மழை ஓய்ந்ததால் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதிலும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும் ஆஸ்திரேலிய அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

வெள்ளத்தால் சாலைக் கட்டமைப்புகள் மோசமடைந்துள்ளதால் ஆங்காங்கே மக்கள் தனியாகத் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ அதிகாரிகள் ஹெலிக்காப்டர்கள் மூலம் உதவிப்பொருள்களை விநியோகித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 32,000க்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் தனித்துவிடப்பட்டுள்ளனர், அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளத்தால் விளைநிலங்கள் நாசமாகின, மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நியூ செளத் வேலஸ் அரசாங்கம் அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகிறது.

ஹெலிகாப்டர் மூலம் கால்நடைகளுக்குத் தீவனம், கால்நடைக்கான மருத்துவப் பொருள்கள் உள்ளிட்டவற்றை அது கொடுத்துள்ளது.

ஹெலிகாப்டர் மூலம் 43 முறை உதவிப் பொருள்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 130 முறை உதவிப் பொருள்கள் வெவ்வேறு வழிகளில் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில நாள்களுக்கு முன்னர் வெள்ளத்தில் சிக்கி 50,000 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகச் சரி செய்யப்பட்டு வருகிறது.

“நிலைமை இன்னும் ஆபத்தாகத்தான் உள்ளது, துப்புரவு மற்றும் நிவாரண வேலைகள் தொடர்ந்து நடத்தப்படும்,” என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்தார்.

அண்மை ஆண்டுகளில் ஆஸ்திரேலியா கடுமையான இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகிறது.

வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ என அந்நாடு பாதிக்கப்பட்டதற்குப் பருவநிலை மாற்றம் காரணமாக இருக்கும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். இது கவலை தரும் போக்கு என்றும் அவர்கள் அக்கறைத் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்