செயற்கை நுண்ணறிவைக் காரணங்காட்டி ஆட்குறைப்பு செய்வதாக ஆஸ்திரேலிய நிறுவனங்கள்மீது குற்றச்சாட்டு

செயற்கை நுண்ணறிவைக் காரணங்காட்டி ஆட்குறைப்பு செய்வதாக ஆஸ்திரேலிய நிறுவனங்கள்மீது குற்றச்சாட்டு

படம்: ஏஎஃப்பி

12 Nov 2026 - 4:41 pm

2 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவின் முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதற்கும் பணிகளை வெளிநாடுகளுக்கு மாற்றுவதற்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைக் காரணமாகக் காட்டுவது அதிகரித்துவருவதாகத் தொழிற்சங்கத்தினரும் நிபுணர்களும் கூறுகின்றனர்.

பொருளியல் மெதுவடைவுக்கு மத்தியில் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு அது சிக்கலை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான குவான்டாஸ், ‘அக்சென்ச்சர்’ (Accenture) ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் ஏஐ சார்ந்த மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 850 வேலைகளைக் குறைக்கவும் சில நிர்வாகப் பணிகளை வெளிநாடுகளுக்கு மாற்றவும் உள்ளதாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) அறிவித்தது.

இந்நடவடிக்கையால், செயற்கை நுண்ணறிவைக் காரணங்காட்டி ஆட்குறைப்பு செய்வதாக அந்த ஆஸ்திரேலிய நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‘வைஸ்டெக்’ (WiseTech), ‘அட்லாசியன் (Atlassian) ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் காரணமாகக் காட்டி இவ்வாண்டு ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

அதோடு, ‘டெல்ஸ்ட்ரா’ (Telstra) எனும் தொலைத்தொடர்பு நிறுவனமும், ‘அக்சென்ச்சர்’ நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தும் ஏஐ கூட்டு முயற்சியில் வேலைகளைக் குறைத்ததுடன், சில பணிகளை இந்தியாவிற்கு மாற்றியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மற்ற பெருநிறுவனங்கள் தங்கள் அறிவிப்புகளில் ஏஐ தொழில்நுட்பத்தை வெளிப்படையாகக் குறிப்பிடாதபோதிலும், உள்நாட்டில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு இந்தியா, ஃபிலிப்பீன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளன.

அண்மையில் அரசாங்க இணையத்தளம் ஊடுருவப்பட்ட சம்பவத்தின் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் அறிவித்தார். அப்போது, குவான்டாஸ் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

“செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய வாய்ப்பாகவும் ஒரு முக்கியப் பொருளியல் பிரச்சினையாகவும் உள்ளது,” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய ஊழியர்களுக்குப் பதிலாகச் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படவில்லை என்றும் மாறாகக் குறைந்த சம்பளம் பெறும் வெளிநாட்டு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர் என்றும் தொழிற்சங்கங்கள் வாதிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்