தாக்குதலில் கால்களை இழந்த ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் வீடு திரும்பினார்

தாக்குதலில் கால்களை இழந்த ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் வீடு திரும்பினார்

படம்: ராய்ட்டர்ஸ்

16 Nov 2026 - 6:31 pm

2 mins read

சிட்னி: ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸ் அக்டோபரில் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதலில் தமது இரண்டு கால்களையும் இழந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து திங்கட்கிழமை (நவம்பர் 16) வீடு திரும்பியிருக்கிறார்.

நான்கு வாரங்களுக்குப் பிறகு வீடுதிரும்பிய சுயேச்சை அரசியல்வாதியான அவர், மருத்துவமனையின் பரிவுமிக்க சிகிச்சைக்கு நன்றி தெரிவித்தார். தமது மறுவாழ்வுச் சிகிச்சை மெல்பர்னில் தொடரும் என்றும் அவர் கூறினார்.

இவ்வாண்டு அக்டோபர் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் கிராமப்புற நகரமான வங்கராட்டாவில் சுயேச்சை அரசியல்வாதியான திருவாட்டி ஹெலன் ஹெய்ன்ஸ் தமது அலுவலகத்திற்கு வெளியே காருக்கு அருகில் நின்றிருந்தார். அப்போது டொயோட்டா லேண்ட் குரூசர் வாகனம் அவர்மீது மோதியது. அதில் அவர் படுகாயமடைந்தார்.

கடுமையாகக் காயமடைந்த 65 வயது திருவாட்டி ஹெய்ன்ஸ், அவசரச் சிகிச்சைக்காக மெல்பர்னிலுள்ள ஆல்ஃபிரட் மருத்துவமனைக்கு வான்வழியாகக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவரது இரு கால்களும் அகற்றப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பில் 43 வயது பிரெண்டன் நுஜென்ட்மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, வேண்டுமென்றே கடுங்காயம் விளைவித்தது, பொது அதிகாரியைத் தாக்கியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

திருவாட்டி ஹெய்ன்ஸ் விரைவில் குணமடைவதற்கு ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தாதியாகவும் மகப்பேற்றுத் தாதியாகவும் பணியாற்றிய திருவாட்டி ஹெய்ன்ஸ் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

ஊழல் ஒழிப்பு, வலுவான பருவநிலை நடவடிக்கை ஆகியவற்றுக்குக் குரல் கொடுத்ததால் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

அரசியல் வன்முறை அரிதான ஆஸ்திரேலியாவில், மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான மிரட்டல்கள் அதிகரித்து வருவது குறித்து இச்சம்பவம் ஆழ்ந்த அக்கறையை எழுப்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்