கேன்பரா: மில்லியன் கணக்கான வர்த்தகங்களுக்கு முறையாகத் தெரிவிக்காமல் கட்டணங்களை விதித்ததாக காமன்வெல்த் பேங்க ஆஃப் ஆஸ்திரேலியா (சிபிஏ) வங்கி மீது அந்நாட்டு நிர்வாக ஒழுங்குமுறை ஆணையம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய பங்கு, முதலீடுகள் ஆணையம் (ஏஎஸ்ஐசி) சிபிஏ வங்கி மீது வழக்கு தொடுத்துள்ளதாக வியாழக்கிழமை (நவம்பர் 12) அதன் அறிக்கையில் தெரிவித்தது.
அவ்வங்கியின் ‘காம்பிஸ்’ எனப்படும் பிரிவு வர்த்தக வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கிவருகிறது. சிறிய வர்த்தக நிறுவனங்கள் உள்ளடங்கிய அப்பிரிவின் வாடிக்கையாளர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பே வங்கிச் சேவைக்கான கட்டணங்களில் குறைபாடுகள் உள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
சிபிஏ வங்கியின் பேச்சாளர் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.
வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து நேரடியாக கட்டணங்கள் செலுத்துவதற்கும் (டெபிட்) கடன் கட்டணங்களுக்கும் (கிரெடிட்) வசூலிக்கப்பட்ட சேவைக் கட்டணங்கள் அப்பிரிவின் விதிமுறைகளிலும் நிபந்தனைகளிலும் தெரிவிக்கப்பட்டதுபோல் அமையவில்லை என்று ஆணையம் விளக்கியது.
2020ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2025ஆம் ஆண்டு மே மாதம் வரையில் ஏறத்தாழ 42,000 வாடிக்கையாளர்கள் $8.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$7.47 மில்லியன்) மதிப்பிலான தொகையைக் கூடுதலாகச் செலுத்தியுள்ளனர்.
“காமன்வெல்த் வங்கி வர்த்தக வாடிக்கையார்களுக்கு கொடுத்த அடிப்படை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. செலுத்த வேண்டிய சேவைக் கட்டணம் என்று தெரிவித்த தொகையை குறிப்பிட்டதுபோல் வங்கி விதிக்கவில்லை என்று என்று நாங்கள் குற்றஞ்சாட்டுகிறோம்,” என்று ஏஎஸ்ஐசி அமைப்பின் ஆணையர் எலன் கிர்க்லான்ட் கூறினார்.
கடந்த 2015 முதல் சிபிஏ வங்கியிடம் அதன் வாடிக்கையாளர்கள் புகார் அளித்திருந்தனர். மேலும் 2016ல் உள்தணிக்கை நடந்து, வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணங்கள் செலுத்தியுள்ளனர் என்பது அடையாளம் காணப்பட்டது. அதன்பின்னரும் வங்கி முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று ஆணையம் தெரிவித்தது.
