ஆஸ்திரேலியாவின் புதிய மசோதா; கவலையில் கூகல்

ஆஸ்திரேலியாவின் புதிய மசோதா; கவலையில் கூகல்

படம்: ராய்ட்டர்ஸ்

09 Nov 2026 - 5:55 pm

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவில் முன்மொழியப்பட்டுள்ள புதிய இணையப் பாதுகாப்பு மசோதாவால், 18 வயதுக்குட்பட்டோர் கூகல் நிறுவனத்தின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்துவது பாதிக்கப்படலாம்.

இதனை கூகலின் ஆஸ்திரேலியக் கொள்கைப் பிரிவு திங்கட்கிழமை (நவம்பர் 9) தெரிவித்தது.

இந்த வரைவு மசோதா வரம்புகளை மீறுவதாகத் தொழில்துறையினர் எச்சரித்துள்ளனர்.

‘டிஜிட்டல் டியூட்டி ஆஃப் கேர்’ என்ற அந்த மசோதா ஆஸ்திரேலிய மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அது செனட் சபையில் நிறைவேற அனைத்துக் கட்சிகளின் ஆதரவும் தேவை.

மசோதா சட்டமாக மாறினால் இணைய நிறுவனங்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை நீக்க வேண்டும். இல்லையெனில் 109 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$96 மில்லியன்) வரை அபராதம் விதிக்கப்படும்.

இச்சட்டம் தணிக்கையாளர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் என இணைய நிறுவனங்களும் பேச்சுரிமை ஆர்வலர்களும் கூறுகின்றனர். இதனால், உள்ளடக்கங்களை நீக்க வேண்டிய அழுத்தம் தளங்களுக்கு ஏற்படும்.

ஆபாசப் பதிவுகளைக் குழந்தைகள் பார்க்கும் அபாயம் இருந்தால், வயது சரிபார்ப்பைக் கட்டாயமாக்கும் பிரிவு புதிய சட்டத்தில் உள்ளது. இதனால், மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்ற அன்றாடச் சேவைகளுக்கும் தடை விதிக்க நேரிடலாம் என கூகல் கவலை தெரிவித்துள்ளது.

இதனால் தனியார் தகவல் தொடர்புகளைக் கண்காணிக்கும் நிலை உருவாகலாம் என்றும் அது குறிப்பிட்டது.

மெட்டா, டிக்டாக், ஸ்னாப்சேட் பிரதிநிதிகளும் இதே கவலையைத் தெரிவித்தனர். அபராதத்தைத் தவிர்க்கத் தளங்கள் அதிகக் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் என அவர்கள் வாதிட்டனர்.

பாதுகாப்பான இணையத்திற்கு இதுவே சிறந்த வழி என அரசாங்கம் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்