தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கஸக்ஸ்தானில் விழுந்து நொறுங்கிய அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம்; 38 பேர் உயிரிழப்பு

2 mins read
013a089d-e85e-4a72-9ad7-681c0affd2e7
கஸக்ஸ்தானின் அக்தாவ் நகருக்கு அருகே டிசம்பர் 25ஆம் தேதி அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் அவசரகால உதவிப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

அஸ்தானா: கஸக்ஸ்தானில் டிசம்பர் 25ஆம் தேதி அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் 38 பேர் உயிரிழந்தனர்; மேலும் 29 பேர் காயமுற்றனர்.

காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதன் தொடர்பில் வியாழக்கிழமை அஸர்பைஜானில் தேசிய அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அதிபர் இல்ஹம் அலியெவ் அறிவித்துள்ளார். முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளின் ‘சுதந்திர நாடுகளின் காமன்வெல்த்’ கூட்டமைப்பின் (CIS) உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்யா செல்லவிருந்த அவர் தமது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

உக்ரேனிய ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களால் அண்மையில் பாதிக்கப்பட்ட ரஷ்யப் பகுதியைத் தவிர்ப்பதற்காக அஸர்பைஜான் ஏர்லைன்சின் J2-8243 விமானம் திசை திரும்பிய வேளையில் விபத்துக்குள்ளானது.

அஸர்பைஜான் தலைநகர் பக்குவிலிருந்து ரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள குரோஸ்னி நகரை நோக்கி அந்த விமானம் சென்றுகொண்டிருந்தது. வழக்கமான பாதையிலிருந்து சில நூறு கிலோமீட்டருக்கு அப்பால் பறந்த அது, கேஸ்பியன் கடலின் மறுகரையில் விழுந்தது.

அந்த விமானத்தில் பயணிகள் 62 பேரும் சிப்பந்திகள் ஐவரும் இருந்ததாக விமான நிறுவனம் கூறியது.

பறவை மோதியதால் விமானம் அவ்வாறு விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று கருதுவதாக ரஷ்ய விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு அமைப்பு கூறியது.

ஆனால் அவ்வாறு நேர்ந்திருக்கச் சாத்தியமில்லை என்று விமானப் போக்குவரத்து வல்லுநர் ஒருவர் கூறுகிறார்.

அந்த விமானம் ஏன் கேஸ்பியன் கடலைக் கடந்து சென்றது என்பது குறித்து அதிகாரிகள் உடனடியாக விளக்கமளிக்கவில்லை.

அந்த விமானம் சென்ற பாதையில் ஆக அண்மையில் அமைந்துள்ள ரஷ்ய விமான நிலையம் டிசம்பர் 25ஆம் தேதி மூடப்பட்டிருந்தது.

குரோஸ்னி பகுதியில் இம்மாதம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவதை உக்ரேன் ஒப்புக்கொள்ளவில்லை.

மோசமான வானிலையால் அந்த விமானம் வேறு பாதையில் சென்றதாகத் தமக்குத் தகவல் தரப்பட்டதாக அஸர்பைஜான் அதிபர் இல்ஹம் அலியெவ் கூறினார். இருப்பினும் விபத்துக்கான காரணம் தெரியாததால் அதன் தொடர்பில் முழுமையான விசாரணை அவசியம் என்றார் அவர்.

“பெருந்துயரமான இச்சம்பவத்தால் அஸர்பைஜான் மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பேரிடருக்கான காரணத்தைக் கண்டறிய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி அவர் உத்தரவிட்டதாக அதிபர் அலுவலகம் தெரிவித்தது. விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகக் கூறிய அதிபர் அலியெவ், காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுவதாகத் தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், விமானத்தின் தகவல் பதிவுப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக அஸர்பைஜானின் அரசாங்கச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் பயணம் செய்தோரில் 37 பேர் அஸர்பைஜானையும் ஆறு பேர் கஸக்ஸ்தானையும் சேர்ந்தவர்கள். மூவர் கிர்கிஸ்தான் நாட்டினர். 16 பேர் ரஷ்யர்கள் என்று கஸக்ஸ்தான் போக்குவரத்து அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்