பாக்கூ: அஜர்பைஜானில் இயங்கிவந்த தனியார் இணையத் தொலைக்காட்சி நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் இருவர், மூன்று செய்தியாளர்கள், நான்கு தன்னார்வலர்கள் ஆகிய ஒன்பது பேருக்குப் பாக்கூ நீதிமன்றம் திங்கட்கிழமை (ஜூலை 27) 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
நிதி சார்ந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ‘டாப்ளம் டிவி’ எனும் இணையத் தொலைக்காட்சியைத் தொடங்கிய அகிஃப் குர்பானோவுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இணை நிறுவனர் அலஸ்கர் மம்மத்லிக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
தங்கள்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மறுத்துள்ளனர்.
வழக்கு விசாரணை ஒருதலைப்பட்சமாகவும் நேர்மையற்ற முறையிலும் நடைபெற்றதாகக் கூறிய வழக்கறிஞர்கள், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்தனர்.
‘டாப்ளம் டிவி’ அரசியலமைப்பு, ஊழல், மனித உரிமைகள், சமூக விவகாரங்கள் குறித்து செய்தி வெளியிட்டு வந்தது. கடந்த 2024 மார்ச் மாதத்தில் அதன் அலுவலகங்கள் சோதனையிடப்பட்டு, ஊழியர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள்மீது சட்டவிரோதத் தொழில், கள்ளப்பணப் பரிவர்த்தனை, வரி ஏய்ப்பு, ஆவண மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்நிலையில், ஊடகவியலாளர்கள் மீதான நடவடிக்கைகள் அரசியல் சார்ந்தவை அல்ல என்று அஜர்பைஜான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக அஜர்பைஜானில் செய்தியாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
ஊடகச் சுதந்திரக் குறியீட்டில் அஜர்பைஜான் பின்னடைவைச் சந்தித்துவரும் நிலையில், பத்திரிகைச் சுதந்திரம் குறித்த கவலையை மேற்கத்திய நாடுகள் வெளிப்படுத்தியுள்ளன.
‘எல்லைகளற்ற செய்தியாளர்கள்’ ஊடக உரிமை அமைப்பு வெளியிட்ட 2026ஆம் ஆண்டிற்கான பத்திரிகைச் சுதந்திரத் தரவரிசையில், 180 நாடுகளில் அஜர்பைஜான் 171வது இடத்திற்குகுத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் அந்த நாடு 167வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

